8/09/2011

தண்ணிர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா.. இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருக - திருவுளமோ?

எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து ஈழக் கனவு என்பது என்னோடு பயணித்து வருகிறது.
எனது பள்ளி, கல்லூரி வாழ்நாள்லெல்லாம் கதைத்தலாய், கட்டுரையாய், புகைப்படமாய், குறும்படமாய் என் உள்ளோட்டமாய் வளர்ந்தே வந்துள்ளது.
2006 - ஆடடா களத்தே எனும் என் ஈழக் குறும்படப் பணிகளுக்காக கும்முடிப்பூண்டி, புழல் என ஈழ அகதிகள் முகாம் மக்களை சந்தித்தேன். காலம் கணிந்து வருகிறது. எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் ஈழ விடுதலை எங்கள் தலைவர் பெற்றுத் தருவார் என்று நம்பி வாழ்ந்தவர்கள் முகங்களின் நம்பிக்கை இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
2009 மே - புதுமாத்தளன் முள்ளி முடிவிற்கு பிறகு இன்றைய அரசியல் நிலைகள் எதிர் திசை நோக்கி நகர்கின்றன. அன்று புலிகளை அழிக்கப் புறப்பட்ட சக்திகள் இன்று ராஜபக்சேவை மறைமுகமாய்க் கைக்காட்டி செய்த பாவத்திற்கு தீர்வு தேடுகிறது.
பாவம் செய்ய தூண்டியவர்களும் உதவியவர்களும் கழுவாய்த் தேட முயற்சிக்கின்றனர்.
காட்சிகள் மாறுகின்றது.. காய்கள் நகர்கின்றன...
ஈழ விடுதலையை எதிர்த்தவர்களே இன்று நேச சக்திகளாக உருமாறுகிறார்கள்...
ஜெ.யை ஹிலாரி சந்திக்கின்றார்...
போர்க் குற்ற விசாரனைத் தவிர்க்க ரணில் அமெரிக்காவிற்கும் லண்டனிற்குமாக அலைகிறார்...
நம்பியார்களும் மேனன்களும் நிருபமாவை ராஜபக்சேவின் விருந்திற்கு அனுப்புகிறார்கள்...
எப்படியோ... ஒரு தீர்விற்கு வழி தேடப்படுகிறது.
அது காணி, காவல் அதிகாரமில்லா கட்டப்பஞ்சாயத்து ஆகுமா? புரியவில்லை...
ஆனால், எல்லாம் இழந்து சோர்ந்து போன எம் மக்களிடம் துளியும் சக்தியில்லை...
எழுந்திருக்க இயலவில்லை.. நடப்பது நடக்கட்டும் என்று வெறுப்பில் கசந்த கையறு மனநிலை.
ஆயினும், உலக நல் மாந்தம் உன்னிப்பாய் கவனிக்கிறது. ஒப்பாரிகளையும் ஓலங்களையும் கண்டு உலகம் இந்தியாவை சபிக்கிறது. ஐ.நா.வை முடுக்குகிறது.
ஒன்றுக்கு பத்தாய் நாம் விலைக் கொடுத்தும் விடுதலைச் சாத்தியக் கூறு வெகுதொலைவாகக் கூட தெரியவில்லை. காலம் எதையும் கணிய வைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றிப்போம்.
தண்ணிர் விட்டொம் வளர்த்தோம் சர்வேசா.. இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருக - திருவுளமோ?

8/04/2011

பழைய புத்தகக் கடையில் -3 : (சிமெண்ட்டு காடுகளின் உஷ்ணத்தில் வாழ்வு பொசுங்குகிறது)




புத்தகத்தின் பெயர்: கத்துக் குட்டி

நகரம்.
சிமெண்ட்டு காடுகளின் உஷ்ணத்தில் வாழ்வு பொசுங்குகிறது..
யாருக்கும் யாரையும் தெரியவில்லை..
எட்டாண்டு வாழ்ந்தும் எதிர் வீட்டுக்காரர் தெரியாத நிலை..
பெற்றாரையும் உற்றாரையும் புரந்தள்ளுகிறது..
உறவுகள் முறிந்த ஆசிரமம் - அனாதை இல்லங்கள்..

ஆயினும்,
கிராமம் ஓர் சொர்கம்.. அது வெள்ளந்திகள் உலா மண்டபம்.
அங்கு மரங்களின் குளிர் நிழல்களே வாழ்விடம்.
தனிமனிதர்களோ தனிமையோ இல்லை. எல்லோருக்கும் எல்லாருமே உறவு.
தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன்,பேரன், பேத்தி, சண்டை, சமாதானம்..
கேலியும் கிண்டலுமாய் வாழ்வியல் சொக்கும் கிராமிய காட்சிகள்..

"என்ன தாத்தா.. வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்க? என் தாவனி அம்புட்டு புடிச்சிருக்கா?"
"ஏல.. நம்ம செவலி தான் சீவனத்து நிக்கால.. அதான் இந்த சின்ன சிறுக்கிய வளைக்கலாம்னு பாக்கன்.."
"ஏ கிழ கொடுக்கி.. உனக்கு இந்த வயசுல இம்புட்டு கேக்கா?! இரு இன்னைக்கு செவலி கையில சொல்லி கஞ்சிக்கு தவுடு காட்டுறன்.."
என சொல்லிட்டு ஓடுறவ கொஞ்சம் நின்னு..
"சரி சரி.. இந்தா.." னு மடியிலேர்ந்து ரெண்டு கொடுக்காபுலிய எடுத்து கொடுத்து போகும் இளஞ்சிறுசுகள்.

"ஏய்.. செவலி.. இன்னைக்கு குழ ஒடிச்சி போடுதன்.. குத்த வச்சி ஒரு பாட்டு ஒழுங்கா பாடல, அம்புட்டுதான்.. உன் மந்தாடு அம்புட்டும் திக்காளுக்கு கலச்சிடுவேன்.."

"ஏ கண்ணு பொன்னுதாயி.. என் சீம மவராசன்..
உன்ன சீதனமா கேக்காண்டி.."
"ஏ.. செவலி அப்படியே நிறுத்து. தோ குழகம்ப ஒடிச்சிட்டு வர்றேன்.."

வயசுக்கு வந்ததுக்கும் வயசு போனதுக்குமான சொலவடை சொல்லாடல் கேலிகளும் கிண்டல்களும் வாழ்வின் எல்லையை தொடும் பெரிசுகளுக்கு கிராமியம் வசந்தங்களாய் இனிக்கும்.

எனக்கு இந்த நகரங்களின் வெளியில் மார்கெட் வாசல் வெளிகளிலும், கடை தெரு ஓரஞ்சாரங்களிலும், கூறு கட்டி கீரை, காய்கறி, வெங்காயம், பூண்டு, பழங்கள் விற்கும் பாட்டிகளே மிகவும் பிடித்த வணிக மனிதர்கள். அவர்களை வம்பிற்கு இழுத்து பேரம் பேசுவதும்.. இறுதியில், கேட்டதை விட அதிகம் கொடுத்து அதுகள் முகத்தை ரசிப்பதும் எனக்கு அலாதி விருப்பம்.

"பேராண்டி நீ நல்லா இருப்ப.." ன்னு நெட்டி முறித்து உச்சி முகர்வதும்.. அந்த அழுக்கும் வாசனையும், அன்பின் கணிவும், இங்கும் நான் தேடும் சுகங்கள்.

கிராமங்களில், அனாதைகள் இருப்பதில்லை. இதோ ஓர் ஊர் பொதுக் கிழவி. இவள் பணியாரம் விற்பவள். பழைய புத்தகக் கடையில் தோண்டி எடுத்த புதையல், இந்த கவிதை. எழுதிய அன்பு உள்ளத்தின் பெயரை தேடி கிடைக்கவில்லை. எனினும், மனதை வருடிய கவிதை, இதோ.

பணியாரக் கெழவி

பணியாரக் கெழவி
இப்பவோ
அப்பவோன்னு
கெடக்காளாம்..

அம்மாசி
தாண்டுறது
செரமமாம்..,

செய்தியோடு
சேர்த்து
ஊகத்தையும்
இறக்கி வச்சுபுட்டு
நகர்ந்தாள்
மோர்க்காரி...

அடுத்த ஊரு
பேங்க்-ஐ விட
அதிகமா
கடன் கொடுத்தவ...
ஊரு பசிக்கு உடனடி
அட்சய பாத்திரம்
அவதான்

அவளுக்கு அப்பன்
ஆத்தா
வச்ச பேரு
ஒருத்தருக்கும் தெரியாது
ஆனா
ஊரு கூடி
வச்ச பேரு
பணியாரக் கெழவி...

எந்த ஊரு
என்ன சாதி
எவருங் கேட்டதில்ல
அவளுஞ் சொன்னதில்ல...

பணியாரம்
கேட்டு நின்னோமே தவிர
அவள்
பூர்வீகம் நாங்க
கேட்டதில்ல...

அறுவடை
சீசன்ல
களத்து தோசை
சுடுவா.. பாருங்க..
ச்...சோ...சும்மா
அப்படி இருக்கும்.

கீழே ஒன்னு
மேலே ஒன்னுன்னு
ரெண்டு தோசை...
அதுக்கு நடுவால
வெல்லத்தை வச்சு
ஒன்னாக்கி கொடுப்பா...

வாங்கிச் சாப்பிட்டுட்டு
காசு கொடுத்தா
எண்ணிப் பார்க்காம
இடுப்புல சொருகுவா...

நெல்லு கொடுத்தா
அளந்து பார்க்காம
சாக்குல போட்டுப்பா...

மோர்க்காரி ஊகம்
மோசமில்லை...

கணக்கா
அம்மாசி அன்னக்கி
முடிஞ்சு போச்சு...

தப்பு - கொம்புன்னு
ஊறே கூடி நின்னு

ஜாம் ஜாம்னு
மயானம் கொண்டு
போனோம்...

புதைக்கிற தானே
நம்ம சாதி வழக்கம்
மாறா எரிக்க
ஏற்பாடு ஆச்சு...
விசாரிச்சப்ப...

அடுப்புல தானய்யா
என் ஆயுசை ஓட்டினேன்
அதனால்
அடுப்புக்கே
இரையாகனும்னு
சொன்னாளாம்
கெழவி...

எனக்கு மனசு
கணத்துப் போச்சு

கீழேயும் மேலேயும்
வெறக அடுக்கி
ஊரே கூடி
கொள்ளி வச்சோம்...
மேலேயும்
கீழேயும் வெறகு

இரண்டுக்கு நடுவால
களத்துத் தோசையில

வெல்லக் கணக்கா
"பணியாரக் கெழவி"
முட்டி வெடிச்சிருச்சி...
அழுகை...