8/09/2011

தண்ணிர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா.. இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருக - திருவுளமோ?

எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து ஈழக் கனவு என்பது என்னோடு பயணித்து வருகிறது.
எனது பள்ளி, கல்லூரி வாழ்நாள்லெல்லாம் கதைத்தலாய், கட்டுரையாய், புகைப்படமாய், குறும்படமாய் என் உள்ளோட்டமாய் வளர்ந்தே வந்துள்ளது.
2006 - ஆடடா களத்தே எனும் என் ஈழக் குறும்படப் பணிகளுக்காக கும்முடிப்பூண்டி, புழல் என ஈழ அகதிகள் முகாம் மக்களை சந்தித்தேன். காலம் கணிந்து வருகிறது. எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் ஈழ விடுதலை எங்கள் தலைவர் பெற்றுத் தருவார் என்று நம்பி வாழ்ந்தவர்கள் முகங்களின் நம்பிக்கை இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
2009 மே - புதுமாத்தளன் முள்ளி முடிவிற்கு பிறகு இன்றைய அரசியல் நிலைகள் எதிர் திசை நோக்கி நகர்கின்றன. அன்று புலிகளை அழிக்கப் புறப்பட்ட சக்திகள் இன்று ராஜபக்சேவை மறைமுகமாய்க் கைக்காட்டி செய்த பாவத்திற்கு தீர்வு தேடுகிறது.
பாவம் செய்ய தூண்டியவர்களும் உதவியவர்களும் கழுவாய்த் தேட முயற்சிக்கின்றனர்.
காட்சிகள் மாறுகின்றது.. காய்கள் நகர்கின்றன...
ஈழ விடுதலையை எதிர்த்தவர்களே இன்று நேச சக்திகளாக உருமாறுகிறார்கள்...
ஜெ.யை ஹிலாரி சந்திக்கின்றார்...
போர்க் குற்ற விசாரனைத் தவிர்க்க ரணில் அமெரிக்காவிற்கும் லண்டனிற்குமாக அலைகிறார்...
நம்பியார்களும் மேனன்களும் நிருபமாவை ராஜபக்சேவின் விருந்திற்கு அனுப்புகிறார்கள்...
எப்படியோ... ஒரு தீர்விற்கு வழி தேடப்படுகிறது.
அது காணி, காவல் அதிகாரமில்லா கட்டப்பஞ்சாயத்து ஆகுமா? புரியவில்லை...
ஆனால், எல்லாம் இழந்து சோர்ந்து போன எம் மக்களிடம் துளியும் சக்தியில்லை...
எழுந்திருக்க இயலவில்லை.. நடப்பது நடக்கட்டும் என்று வெறுப்பில் கசந்த கையறு மனநிலை.
ஆயினும், உலக நல் மாந்தம் உன்னிப்பாய் கவனிக்கிறது. ஒப்பாரிகளையும் ஓலங்களையும் கண்டு உலகம் இந்தியாவை சபிக்கிறது. ஐ.நா.வை முடுக்குகிறது.
ஒன்றுக்கு பத்தாய் நாம் விலைக் கொடுத்தும் விடுதலைச் சாத்தியக் கூறு வெகுதொலைவாகக் கூட தெரியவில்லை. காலம் எதையும் கணிய வைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றிப்போம்.
தண்ணிர் விட்டொம் வளர்த்தோம் சர்வேசா.. இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருக - திருவுளமோ?

8/04/2011

பழைய புத்தகக் கடையில் -3 : (சிமெண்ட்டு காடுகளின் உஷ்ணத்தில் வாழ்வு பொசுங்குகிறது)




புத்தகத்தின் பெயர்: கத்துக் குட்டி

நகரம்.
சிமெண்ட்டு காடுகளின் உஷ்ணத்தில் வாழ்வு பொசுங்குகிறது..
யாருக்கும் யாரையும் தெரியவில்லை..
எட்டாண்டு வாழ்ந்தும் எதிர் வீட்டுக்காரர் தெரியாத நிலை..
பெற்றாரையும் உற்றாரையும் புரந்தள்ளுகிறது..
உறவுகள் முறிந்த ஆசிரமம் - அனாதை இல்லங்கள்..

ஆயினும்,
கிராமம் ஓர் சொர்கம்.. அது வெள்ளந்திகள் உலா மண்டபம்.
அங்கு மரங்களின் குளிர் நிழல்களே வாழ்விடம்.
தனிமனிதர்களோ தனிமையோ இல்லை. எல்லோருக்கும் எல்லாருமே உறவு.
தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன்,பேரன், பேத்தி, சண்டை, சமாதானம்..
கேலியும் கிண்டலுமாய் வாழ்வியல் சொக்கும் கிராமிய காட்சிகள்..

"என்ன தாத்தா.. வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்க? என் தாவனி அம்புட்டு புடிச்சிருக்கா?"
"ஏல.. நம்ம செவலி தான் சீவனத்து நிக்கால.. அதான் இந்த சின்ன சிறுக்கிய வளைக்கலாம்னு பாக்கன்.."
"ஏ கிழ கொடுக்கி.. உனக்கு இந்த வயசுல இம்புட்டு கேக்கா?! இரு இன்னைக்கு செவலி கையில சொல்லி கஞ்சிக்கு தவுடு காட்டுறன்.."
என சொல்லிட்டு ஓடுறவ கொஞ்சம் நின்னு..
"சரி சரி.. இந்தா.." னு மடியிலேர்ந்து ரெண்டு கொடுக்காபுலிய எடுத்து கொடுத்து போகும் இளஞ்சிறுசுகள்.

"ஏய்.. செவலி.. இன்னைக்கு குழ ஒடிச்சி போடுதன்.. குத்த வச்சி ஒரு பாட்டு ஒழுங்கா பாடல, அம்புட்டுதான்.. உன் மந்தாடு அம்புட்டும் திக்காளுக்கு கலச்சிடுவேன்.."

"ஏ கண்ணு பொன்னுதாயி.. என் சீம மவராசன்..
உன்ன சீதனமா கேக்காண்டி.."
"ஏ.. செவலி அப்படியே நிறுத்து. தோ குழகம்ப ஒடிச்சிட்டு வர்றேன்.."

வயசுக்கு வந்ததுக்கும் வயசு போனதுக்குமான சொலவடை சொல்லாடல் கேலிகளும் கிண்டல்களும் வாழ்வின் எல்லையை தொடும் பெரிசுகளுக்கு கிராமியம் வசந்தங்களாய் இனிக்கும்.

எனக்கு இந்த நகரங்களின் வெளியில் மார்கெட் வாசல் வெளிகளிலும், கடை தெரு ஓரஞ்சாரங்களிலும், கூறு கட்டி கீரை, காய்கறி, வெங்காயம், பூண்டு, பழங்கள் விற்கும் பாட்டிகளே மிகவும் பிடித்த வணிக மனிதர்கள். அவர்களை வம்பிற்கு இழுத்து பேரம் பேசுவதும்.. இறுதியில், கேட்டதை விட அதிகம் கொடுத்து அதுகள் முகத்தை ரசிப்பதும் எனக்கு அலாதி விருப்பம்.

"பேராண்டி நீ நல்லா இருப்ப.." ன்னு நெட்டி முறித்து உச்சி முகர்வதும்.. அந்த அழுக்கும் வாசனையும், அன்பின் கணிவும், இங்கும் நான் தேடும் சுகங்கள்.

கிராமங்களில், அனாதைகள் இருப்பதில்லை. இதோ ஓர் ஊர் பொதுக் கிழவி. இவள் பணியாரம் விற்பவள். பழைய புத்தகக் கடையில் தோண்டி எடுத்த புதையல், இந்த கவிதை. எழுதிய அன்பு உள்ளத்தின் பெயரை தேடி கிடைக்கவில்லை. எனினும், மனதை வருடிய கவிதை, இதோ.

பணியாரக் கெழவி

பணியாரக் கெழவி
இப்பவோ
அப்பவோன்னு
கெடக்காளாம்..

அம்மாசி
தாண்டுறது
செரமமாம்..,

செய்தியோடு
சேர்த்து
ஊகத்தையும்
இறக்கி வச்சுபுட்டு
நகர்ந்தாள்
மோர்க்காரி...

அடுத்த ஊரு
பேங்க்-ஐ விட
அதிகமா
கடன் கொடுத்தவ...
ஊரு பசிக்கு உடனடி
அட்சய பாத்திரம்
அவதான்

அவளுக்கு அப்பன்
ஆத்தா
வச்ச பேரு
ஒருத்தருக்கும் தெரியாது
ஆனா
ஊரு கூடி
வச்ச பேரு
பணியாரக் கெழவி...

எந்த ஊரு
என்ன சாதி
எவருங் கேட்டதில்ல
அவளுஞ் சொன்னதில்ல...

பணியாரம்
கேட்டு நின்னோமே தவிர
அவள்
பூர்வீகம் நாங்க
கேட்டதில்ல...

அறுவடை
சீசன்ல
களத்து தோசை
சுடுவா.. பாருங்க..
ச்...சோ...சும்மா
அப்படி இருக்கும்.

கீழே ஒன்னு
மேலே ஒன்னுன்னு
ரெண்டு தோசை...
அதுக்கு நடுவால
வெல்லத்தை வச்சு
ஒன்னாக்கி கொடுப்பா...

வாங்கிச் சாப்பிட்டுட்டு
காசு கொடுத்தா
எண்ணிப் பார்க்காம
இடுப்புல சொருகுவா...

நெல்லு கொடுத்தா
அளந்து பார்க்காம
சாக்குல போட்டுப்பா...

மோர்க்காரி ஊகம்
மோசமில்லை...

கணக்கா
அம்மாசி அன்னக்கி
முடிஞ்சு போச்சு...

தப்பு - கொம்புன்னு
ஊறே கூடி நின்னு

ஜாம் ஜாம்னு
மயானம் கொண்டு
போனோம்...

புதைக்கிற தானே
நம்ம சாதி வழக்கம்
மாறா எரிக்க
ஏற்பாடு ஆச்சு...
விசாரிச்சப்ப...

அடுப்புல தானய்யா
என் ஆயுசை ஓட்டினேன்
அதனால்
அடுப்புக்கே
இரையாகனும்னு
சொன்னாளாம்
கெழவி...

எனக்கு மனசு
கணத்துப் போச்சு

கீழேயும் மேலேயும்
வெறக அடுக்கி
ஊரே கூடி
கொள்ளி வச்சோம்...
மேலேயும்
கீழேயும் வெறகு

இரண்டுக்கு நடுவால
களத்துத் தோசையில

வெல்லக் கணக்கா
"பணியாரக் கெழவி"
முட்டி வெடிச்சிருச்சி...
அழுகை...

7/06/2011

ஓம் நமஹ! ஏழைகளின் கல்வி ஸ்வாஹா!!


மாணவர்களே.. பெற்றோர்களே.. ஆசிரியர்களே..

வீதிக்குப் போராட வாங்க.. விலை பேசப்படுது குழந்தைகளின்

எதிர்கால வாழ்க்கை.



நேற்று காலையில் நான் கண்விழித்ததுமே மூன்று விஷயங்கள பற்றி அறிந்து கொண்டு, சற்றே திக்கு முக்காடிப் போனேன். உலகிலேயே இது போன்ற அதிசயமான வினோதமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமே நடை பெற முடியும் என்பதை அவ்விடயங்கள் சுரீர்ரென எனக்கு உணரச்செய்தது. அவை:


1. என் அக்காளின் குழந்தைகள் இருவர் (வயது : 2, 4) அசோக் நகர் "ஏ ஸ்கூலில்" படிக்குறாங்க. எனக்கு பொதுவாவே 5 வயசுக்கு கீழான குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்கு போறதே புடிக்குறதில்ல.. அது ரொம்ப தேவையானதும் இல்ல.. நம்ம கெரகம் ஒரு வயசுலயிருந்தே போக ஆரம்பிச்சுடுதுங்க.. அந்தளவுக்கு மார்க்கெட்டிங் பண்றானுங்க.. விஷயம் இது தான்: ரெண்டு குழந்தைகளுக்கு இந்த ஆண்டுக்கான கட்டணம் ஒரு லட்சத்தி பதினாராயிரம் ரூபா!!! (அமெரிக்காவின் எந்த ஒரு அதி அற்புதமான பள்ளியின் கட்டணம் கூட இவ்வுளவு இல்லை. தமிழ் நாட்டின் தனியார் பள்ளிகளே உலகின் மிக காஸ்ட்லியான பள்ளிகள்.)


2. என் நண்பனின் தம்பி ஆறாம் வகுப்பு படிக்குறான். அவனது புத்தகத்தில் நான் பார்த்து அதிர்ந்ததில் சில:

சூரிய கிரகணத்தை விளக்கும் படத்தில் சூரியன் இல்லை; பகல் இரவை வெளிப்படுத்தும் படங்களிலும் சூரியன் இல்லை - மறைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் எனக்கு எதுவுமே புரியவில்லை.. அந்த பயலிடம்,


-"என்னடா இது? சூரிய கிரகணத்துல சூரியன் எங்கடா?"

-"புக்கு கெடச்சதே பெரிய விசயம்.. சும்மாயிருண்ணே..."

-"ஏண்டா அலுத்துக்குற?"

-"இத பாரு.."


என்று ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை நீட்டினான்.. அது காந்தத்தின் தன்மை குறித்து விளக்கும் பாடம். கொய்யால!!! காந்தத்தின் வடக்கு தெற்கு துருவங்கள் ஒட்டுமொத்தமா நீக்கப்பட்டிருந்தது.


-"இது என்னதுடா?"

-"வடக்கு தெற்கு துருவம் கறுப்பு செவப்பு கலர்ல இருந்துச்சுல்ல.. அதான் அழிச்சிட்டாங்க.."


(ஐய்யோ!! ராமா!!! இந்த பரதேவதை படுத்துற பாட நெனச்சாலே பத்திகிட்டு வருது.. என்னால முடியல.. வுட்டா சூரியன் வளர்ச்சிய தடுக்குறதுக்கு விவசாயத்தையே நிறுத்தச் சொன்னாலும் சொல்லும் போல, இந்தம்மா.. அய்யாடீ!!! இப்பவே கண்ண கட்டுது. இன்னம் கிட்டதட்ட அஞ்சு வருசம் என்னத்த செய்ய போகுதோ?!)


3. தமிழ் பாட புத்தக அட்டையில் இருந்திருக்கிறது மூன்று விஷயங்கள்.. (1. திருவள்ளுவரின் படம்; 2. "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." ; 3. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..") மூன்றையுமே முழுவதுமாக மறைக்கும் விதத்தில் ஒரு பச்சை கலர் தாள் ஒட்டுங்கள் என்று ஆசிரியர்களுக்கு கட்டளையாம். அதற்கு "முடியவே முடியாது.. கிழிக்குறதும் ஒட்றதும் என் வேல இல்ல.. திருவள்ளுவர மறைக்க மாட்டேன்.. நீ முடிஞ்சத பன்னிக்கோ.." என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள், புரசைவாக்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள். (!!!)


இனி கட்டுரைக்கு செல்வோம்:


கிட்டதட்ட எல்லா முன்னேறிய/ முன்னேறும் நாடுகளிலும் இதுவே நடைமுறையில் இருக்கிறது:


1. பொதுக்கல்வி

2. தாய்மொழியில் கல்வி

3. பொதுப்பாடத் திட்டம்


இம்மூன்றையும் நடைமுறைப்படுத்த எத்தனித்து ஆரம்பித்தது தான் இந்த சமச்சீர் கல்வி. முதற்க்கட்டமாக 'பொது பாடத் திட்டம்' என்கிற அளவிலாவது நடைமுறையாகிறதே என்ற அளவில் வரவேற்கப்பட்டது சமச்சீர்க் கல்வி.


ஆசிய அளவில் மிக முக்கியமான கல்வியாளர்கள், அனுபவமிக்க ஆசிரியர்கள், கல்வி வல்லுனர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டமே சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டம். 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஓராண்டுக்கும் மேல் உழைத்து (உண்மையாகவே உழைத்து) தயாரித்த நூல்கள் இவை. இவை அதி தரமானவை என அனைத்து உண்மையான கல்வியாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இதை ஓரளவுக்கு வீரியத்துடன் செயல் படுத்த ஆவன செய்தது கடந்து போன தி.மு.க. ஆட்சி. தொடர்ந்து, சமச்சீர்க் கல்வி மூலமாக பொது பாடத் திட்டம் (அதாவது இனி இந்த ஸ்டேட் போர்டு சிலபஸ், மெட்ரிக்குலேசன் சிலபஸ்ங்குற பாகுபாடே இல்லாமல் அனைவருக்கும் ஒரே கல்விக்கான பொது பாடத் திட்டம்) இந்த கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என முந்தைய அரசு ஆணையிட்டிருந்தது. இதற்காக 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு ஒன்பது கோடி பாட நூல்களும் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.


இந்த எடத்துல தான் ஒரு பெரிய டிவிஸ்டு: ஆட்சி மாற்றம்: செல்வி.ஜெயலலிதா முதல்வர்: சமச்சீர் கல்விக்கு ஆப்பு!


மெட்ரிகுலேஷன் தான் உயர மேலே நிக்கனும்.. சமமா சீரா இருப்பது அவாளுக்கு ஒவ்வாது.

ஷ்பஷ்டமா சொன்னா, 'சமம்னாலே அவா மடி கலஞ்சிடும்'. அதனால தான் அம்மா, பத்துல ஏழு பேர "அவாளா" பாத்து சமச்சீர் கல்வி குழுவுல போட்ருக்காங்க..


பத்மா ஷேஷாத்ரிக்கும், டி.ஏ.விக்கும் அஹ்ரஹாரம் உய்யத்தான் வழி தெரியும்.. அண்ணாடங்காச்சிய தெரியுமா??!!


அவாளுக்கு தமிழே நீஷ பாஷெ.


ஆங்கிலம்னா தேனா இனிக்கும்; தமிழ்னா தேளா தீண்டும்.


அப்பவே, குல்லுகப்பட்ட இராஜாஜியின் "குலக் கல்வித் திட்ட"த்த பெரியாரும் காமராஜரும் முறி அடித்தனர். இன்றைய கல்விக் கொள்ளையர்களும் மெட்ரிகுலேசன் முதலாளிகளும் பார்ப்பணர்களின் சேர்ந்து நடத்தும் கூட்டு சதி முறியடிக்கப்படும் நாள் தூரமில்லை.


சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை எதிர்க்காத சட்டமன்ற உறுப்பினர்களே, எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்திக்க போகிறீர்கள்??


(எதிர்க் குரல்: அதெல்லாம் நாங்க இலவச லேப் டாப் கொடுத்து கரெக்ட் பன்னிடுவோம்)


இதுக்கு ஒன்னும் கொறச்சலில்ல.. பவ்வியமா கைய கட்டிக்கிட்டு கூனி குறுகி பதுங்கி கிட்டு என்னம்மா நிக்குறாய்ங்க?! எங்க எது கெடைக்கும் எந்த சொம்ப அடிச்சுக்கிட்டு ஓடலாம்னு திறுதிறுன்னு முழிக்குறதுலேயே நல்லா புரியுது இவுக நமக்கு யாருன்னு. பொழச்சுட்டு போங்க வேணாங்கல்ல.. நம்ம புள்ளங்க தலையிலயே மண்ண போடறதயும் வேடிக்க பாக்குறீங்களே?!


அது மட்டுமா?! இஸத்தை பறக்கவிட்ட இடதுகளும் வலதுகளும் கூட சமச்சீர விட்டுட்டு சாமரம் வீசுது.


தமிழக மக்களை ஏமாற்ற, கச்சித் தீவை மீட்க, சிறீலங்கா மீது பொருளாதார தடை என்ற ஏட்டுத் தீர்மாணங்கள் கறிக்கு உதவாது.

இது வெத்து புஸ்வானம்.

அவா சொல்றது வேற, செய்றது வேறன்னு நமக்கும் புரியும், ராஜபக்ஷேவுக்கும் தெரியும்.

சாமி, சோ, மேனன் - சானக்கியம் புரிஞ்சிகிட்டு, ஆரிய சூட்சமத்துக்கு அழகா ஒத்துழைத்து ஈழ விடுதலைய ஒத்தி வைச்சுட்டான் ராஜபக்ஷே.

ஆனா, அம்மாவோட வெத்து சட்டமன்ற தீர்மாணத்துக்கே, ஈழத்தை லீஸ்ஸுக்கு எடுத்து தமிழ்நாட்ல ரியல் எஸ்டேட் பன்ற நம்ம ஆளுங்க, அம்மா "விடுதலை"யே வாங்கி கொடுத்த மாதிரி ஜால்ரா என்ன? விசில் என்ன? குதியாட்டம் என்ன?


என்னத்த சொல்ல?!

பலருக்கு ஈழமே பொழப்பாயிடுச்சி.

அவுங்களுக்கு சமச்சீருன்னா 'வேஸ்ட் சப்ஜெக்ட்'.


குமரி வள்ளுவர் சிலை வாஸ்து படி இல்லேன்னு ஒடைக்கட்டும்..

தி.மு.க.வையே அறிவாலயத்த விட்டு அந்தமானுக்கு வெரட்டட்டும்..

புதிய தலைமை செயலகம் என்ன?! கத்திபாரா, ஜெமினி, வள்ளுவர் கோட்டத்த கூட ஒடச்சு நெரவட்டும்..

அம்மா!!! தாயே!!!

உங்க பங்காளி சண்டையில எங்க கொழந்தைங்க தலையில மட்டும் கைய வைக்காதீங்க..

கல்வியும் இடஒதுக்கீடும் கழகங்களுக்கு மட்டும் சொந்தமில்லை தாயே.


சமச்சீர் பொதுக் கல்வி எம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை.

சமச்சீர்க் கல்வி - ஓர் சமூக நீதி.

பொதுக் கல்வித் திட்ட நடைமுறையை ஒத்திப் போடுவது அல்ல.. ஒழித்துக் கட்டுவதே அவா சதி.

இது வெந்தாடி வேந்தன் பண்படுத்திய பூமி. இங்கு சமூக நீதி அழிக்க யார் வந்தாலும் ஈரோடு பூகம்பத்தில் அழிவது வரலாறு.

6/29/2011

அவன் - இவன் - நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன்.




(பழைய புத்தக கடையில்..)



"லோ பரி ல வண லாரியோ

மரிலு பாயாரோ - பாரி லாரியா நியா
லாபரியா நியா."


இப்பொருளற்ற எழுத்துக்கள் ஓர் நாகரிகக் கோமாளியின் நகை மொழிகள்.

புத்தகம் 1: கலைவாணர் சொற்பொழிவுகள்
தொகுப்பாசிரியர்: வே. குமரவேல்
பக்கங்கள்: 263

புத்தகம் 2: கலைவாணர்
தொகுப்பாசிரியர்: திரு. கழஞ்சூர் செல்வராஜ்
பக்கங்கள்: 823 (மற்ற பக்கங்கள் கிடைக்கவில்லை)


பழய புத்தக கடைகளில் இதுபோன்ற புத்தகங்களை இட்டு செல்பவர்கள் உண்மையிலேயே தியாகிகள் தான். படிக்க, படிக்க பல உண்மைகள் ஆழமாய் நெருட - உடனே பல கட்டுரைகளை எழுதத் துடிப்பு. காலவரட்சியால் இந்த ஒற்றை கட்டுரையாவது உடனே இடும் நிர்பந்த கடப்பாடு.

சார்லெஸ் சாப்ளினின் வாழ்வியல் எனக்கு தந்த ஆச்சர்யங்களைக் காட்டிலும் என்.எஸ்.கேவினுடையது மிக அலாதியாக இருக்கிறது. அதற்கான காரணம் அவர் நம்மவர் (தமிழர்) என்பதனால் இல்லை. உன்னதமான கலைஞனுக்கான அத்துனை அம்சங்களையும் நன்குணர்ந்து வாழ்ந்திருக்கிறார் மனிதர். நாடகம், திரை, கதைப்பாட்டு, வில்லுப்பாட்டு அனைத்திலும் மூட நோய் தீர்க்கும் ஈரோட்டு கசப்பு மருந்தை - நகைச்சுவையில் கலந்து எல்லோரையும் விழுங்க வைத்திருக்கிறார் என்.எஸ்.கே. சும்மா ஒரு சின்னஞ்சிறு சாம்பிளுக்காக அவரது சிந்தனைகள் சில:

"நாமுகன் நாவில் நாமகள் - உறைவது நிசமானால் மலசலம் கழிப்பது எங்கே? எங்கே?
கங்கையிலே குளித்தால் கர்மம் தொலையுமென்றால் - அதில் கத்தும் தவளைக்கும் மீனுக்கும் பேறு எங்கே?" (படம்: நீலகண்டர்)


"பரமசிவன் கி - பார்வதி, கங்கா தோ பத்னி ஹே.. எனக்கு ஒன்னும் நஹிஹே!! கியா கர்ண பஹ்வான்???" (படம்: பவளக்கொடி)

ஒளிவு மறைவின்றி பார்ப்பனியத்தை 'உத்தமபுத்திரனில்'..
போலிச் சாமியார் கபடங்களை 'இராமலிங்க சாமிகளில்'..
"ஏய் நூத்திப்பதினொண்ணு.. சட்டி தூக்கியும் - உன் புத்தி போகலியே.." என்றும்..
நந்தனை கிந்தனாக்கி, ஹரிசந்திரனை சந்திரஹரியாக்கி,
"கட்டுக் கதைகளை விட்டுத்தள்ளடா.. இல்ல உன் குட்டு வெளிப்படுமே" என்றும்..
சவுண்டிகளின் புராணிகப் புரட்டுகளை சவுக்கடி கொடுத்து விரட்டி, திரைப்பட தணிக்கைக்கும் தண்ணி காட்டிய - அவர் தகைமை ஓர் தனித்திறமை.

"சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க.. சொல்லிச்
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க..
குடிக்கத் தண்ணியில்லாம பெருங்கூட்டம் தவிக்குது - சிறு
கும்பல் மட்டும் ஆரஞ்சு பழ ஜூஸு குடிக்குது.." (படம்: மணமகள்)

"தாலிக்கயிறு தனியாயிருக்கும் - தங்கமிருக்காது..
தண்ணிக் குடிக்க தகரக் கொவள சொம்பும் இருக்காது..
பாலு வாங்க குழந்த பசிக்கு பணமுமிருக்காது..
பாழுங்கல்லை குடிப்பது மட்டும் நாளும் தப்பாது.

பாலு வாங்க பணமில்லேன்னா.. டீய குடிச்சுக்கோ..
டீயும் கெடுதல்லுன்னு தெரிஞ்சா மோர குடிச்சுக்கோ..
மோரும் நமக்கு கெடக்கலே.. நீராகாரம் இருக்கவே இருக்கு - அத
குடிச்சு பழகனும்."

"மறைவரோடு பள்ளுப் பறையரையேற்றி ஜாதி மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே!!"
என்று கிந்தன் சரித்திரதில் ரயிலை புகழ்கிறார், நம் சீர்திருத்த கோமாளி.

"இயல்பான உண்மையை அழகுப்படுத்திக் காட்டுவதே கலை. ஔவை கூழுக்கு பாடினாள்; பாரதி ஏழ்மையில் கவிதை தந்தான்; 95% தரித்திரத்திலேயே தான் கலை பிறக்கிறது" என்று தரித்தரத்துக்கு வக்காளத்து வாங்கியவர் என்.எஸ்.கே. வரும் பணத்தையெல்லாம் அள்ளிக் கொடுத்து வெறும் கையினாய், தரித்திரத்திலேயே பிறந்து தரித்திரத்திலேயே மறைந்த கலைஞன். மெட்ராஸ் - தியாகராஜா நகர் - வெங்கட்ராமய்யர் தெரு - 6ஆம் நம்பர் இல்லம் : உதவி நாடியவருக்கு ஒரு எளிய ஷேத்திரம்.

தனக்கென வாழ்ந்து வரும் மனிதர்களின் மத்தியில் வாழ்க்கை எதற்கு? என்று கேள்வி கேட்டுக் கொண்டே வாழ்ந்து காட்டிய கோமாளி.
மக்களுக்காக வாடிய இம் மாசறு கிறுக்கனை, 'கொடுத்து கொடுத்து ஏமாளியானவர்', 'பிழைக்க தெரியாதவர்', 'வாழ தெரியாதவர்' என கேலி செய்தவர் பலருண்டு.
அவர் ஒன்றும் வாழத் தெரியாதவர் அல்ல என்றே தோன்றுகிறது.. அவர் தான் வாழத் தெரிந்தவர்.
இன்றும் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கலையுலகின் கேவங்கள்:


இன்றைய நிலையில் தமிழ்த் திரைத் துறை எலும்பும் தோலுமாய் வீம்பி வீங்கிய வயிற்றுடன் உயிரைக் கண்ணில் வைத்திருக்கும் சீக்கு பிடித்த எதியோப்பிய குழந்தைப் போல மூச்சித் திணறிக்கொண்டிருக்கிறது. கலைத் திறன் இல்லா கழிசடை வாரிசை நாயகனாக்கி முதலீடு செய்து, படமும் எடுத்து, back up குடுத்து, தளபதியே! எதிர்காலமே! தலைவா! புரட்சியே! என பிளக்ஸுகள் நிறுத்தி, மன்றங்கள் எழுப்பி பன்றியை யானையாய் மார்கெட் பன்னும் குறளி வித்தையால் குளைந்திருக்கிறது கோலிவுட்.

சூத்திரகயிற்று விசையில், சுழன்றாடும் காகித பொம்மைக்கு ஆயிரம் பொய் முலாம் பூசி "அவனையும் இவனை"யும் திரைப்படுத்தி மக்களின் காசை உருவ மண்டையில் மயிற் புடுங்குகிறார்கள்.

இத்தகைய கலை ஊழலை 1950களிலேயே என்.எஸ்.கே. வெளிச்சம் போட்டு வீதிக்கு கொண்டுவந்துள்ளார். அன்றைய தமிழ் திரைப்படங்கள் பல பட்டிக்காட்டு பெண்ணைப்போல பதுங்கி டப்பாவுக்குள் ஒளிய காரணமென்ன? என்று கேட்ட கேள்விக்கு பதிலும் தருகின்றார்:

"கலையுலகில் ஒரு திணுசான இன்ஃப்ளுயன்ஸா பரவி விட்டது. யாருக்கும் எதையும் செய்யலாம் என்ற அசட்டு துணிவு வந்துவிட்டது. புது சிந்தனையே காணோம். எங்கெங்கு நோக்கினும் சிபாரிசு பேய் தான் தலை விரித்து ஆடுகிறது. அவருக்கு இவர் வேண்டியவர்.. இவருக்கு அவர் வேண்டியவர்.. என்ற முறையில் தான் அநேகர் அநேக படங்களில் அலுவல் புரிய நேரிடுகிறது. சிபாரிசு மூலமாக முன்னுக்கு வர நினைப்பவர்கள் அவசரக்காரர்கள். இதே அவசர புத்தி, அவர்களின் படைப்புகளிலும் தலைக்காட்டி கடைசியில் கலையையே கெடுத்து விடுகிறது."

"நான் மட்டும் இயக்குநர்கள் கைகளில் மட்டும் அகப்பட்டுக் கொண்டிருந்தால் என்னை இரக்கமில்லாமலேயே பாதாளத்தில் அமுக்கியிருப்பார்கள்."

"தற்பொழுது சில படங்களில் வரும் வில்லன்களைப் பார்த்தால் கூட எனக்கு கோபம் வருவதில்லை; காமெடியன்களைப் பார்த்தால் அவ்வுளவு கோபம் வருகிறது."

"கலை கலைக்காகவே என்கிறார்கள். இது உணவு உணவுக்காகவே என்பது போல் இருக்கிறது. கலை வாழ்க்கைக்காகத் தான்."

இவைகள் கலை பற்றி கலைவாணரின் நிலை மட்டுமல்ல.. உலக கலை கர்த்தாக்களின் நிலைப்பாடுகளும் கூட.

தமிழ் நாட்டுக்கு சேவை செய்த நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன் காலி செய்த இடத்தை என்றும் இன்னொருவர் ஈடு செய்ய முடியாது - அறிஞர் அண்ணா.









6/23/2011

திருவடி சரணம்.



(குத்தீட்டி ஒன்று குத்துகிறது இதயத்தில்)

இரண்டு நாட்களாய் வலை முழுவதுமே சாருவின் செக்ஸ் சாட் பற்றிய திட்டுக்களே. எதார்த்தமாக செக்ஸ் சாட் செய்து மாட்டிக் கொண்ட சாருவை, ஃபேஸ் புக்கில் திட்டுவதன் மூலம் நம்ம 'ஃப்ரெண்ட் லிஸ்ட்டில்' இருக்கும் ஏதாவது ஒரு சுமார் ஃபிகராவது 'லைக்' கொடுக்காதா என்ற ஏக்கத்துடன் அலைகிறார்கள் "இலக்கிய தேடல்" ஏகும் ஆண் வலை நண்பர்கள். "டபுள் லைக்" கொடுக்கிறார்கள் பெண்கள். என்னத்த சொல்ல?

ஃபேஸ் புக், இண்டர் நெட், ப்ளொக் ஸ்பாட், கதை, கவிதை, கட்டு
ரை - எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் எழுதி தீர்த்துவிட்டார்கள். புதிதாய் சொல்ல எதுவும் இல்லை. எழுத்தையே கலையாக, காசாக்கி ஜீவனம் செய்பவர்கள் கூட, எழுத்தை ஆள முடியாமல் தவிக்கும் நிலை. எங்கேயோ படித்தது, எங்கேயோ மறந்தது, எங்கேயோ சுவைத்தது, எங்கேயோ கொரித்தது. எல்லோரும் சொல்லவும் எல்லோரும் எழுதவுமான கணிணி வலையில் சிக்கி நிலை தடுமாறும் நிலையில்..

இன்று:
குத்தீட்டி ஒன்று குத்துகிறது இதயத்தில்.
காட்சியின் கோரத்தில் திடுக்கிட்டு மடிகின்றேன்.
உறக்கத்தைக் கெடுக்கும் உள்ளத்தின் வலி, ஆராது ஆராது; அழுதாலும் தீராது.
சொன்னால் துக்கம்; சொல்லாவிடில் இறுக்கம் - இரட்டை நிலை.
காலத்தின் கட்டாயமாய், இனத்திலே பிறந்த இழிமை.
ஏது சொல்ல? ஏதும் இயலா கையறு கயவனாய், நான்.
முள்ளி நிகழ்விற்கு பிறகு, இன்றும் அடங்க மறுக்கிறது - ரத்த கொதிநிலை.
சாந்தமும் அமைதியும் கொதி நிலையில் குழைந்து மறைகிறது.
எனக்குரிய பொறுப்பிற்காய், என்னை நசுக்குகிறேன்; இயல வைக்க திணருகிறேன்.
எல்லா யன்னலைகளையும் மூடி விட்டேன். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டேன்.
மின்மினியாய் ஒளிரும் டி.வி. சிக்னலை அழுத்தி அணைத்தேன்.
குருட்டு பூனையாய் இருட்டிலே ஒடுங்குகிறேன்.

சம்மட்டி அடியாய் தலை வலி பிளக்கிறது.
என்னை விடுங்கள்.
என்னிடம் யாரும் பேசாதீர்கள்.
எவருக்கும் என்னிடம் வேலை இல்லை.
அனைவரும் இருந்தும் பலி கொடுத்து விட்டீர்கள்.
அருகில் வராதீர்கள்.
ஓடுங்கள், எல்லோரும்.
உங்களைப் போல கேடான மனிதர் உலகில் இல்லை.
ஏன் வெறுக்கின்றேன்?
ஏன் விரட்டுகின்றேன்?
எதை இழந்த போதும் இவ்வுளவு குமுறியதில்லையே.
என் தாயை இழந்தால் கூட, இது அளவு வெடித்து சிதற வாய்ப்பில்லை.
காடு மேடு சொந்தம்; காணும் யாவும் சொந்தம்; கூடும் இல்லை; குஞ்சம் இல்லை.
அழுது அழுது கதறி என்ன? எவ்வித விடிவிற்கும் முடிவிற்கும் தெளிவில்லை.

கழுகும் ஒதுக்கிய பிணங்கள்;
நாயும் வெறுத்த கவுச்சி;
கருகி உருகி கூழாய் சிதைந்த உருவங்கள்;
இயற்கை நிகழ்வு அல்ல - இது மாந்தம் கொன்ற செயற்கை சதி.

முள்ளிவாய்க்கால் - நம் தலையில் விழுந்த பேரிடி;
அதுவே நம் தலைமுறைக் காப்பாற்றும் திருவடி.

உலகப்போர்கள் காணா கொடுமைகள்;
ஹிரோஷிமா நகசாகி சொல்லாத காவுகள்;
ரவுண்ட்ஸ், ஷெல், கிவிர், எரிகணை, பொஸ்பொரஸ், கொத்து... சில பலியாயுதங்களின் பெயர்கள் கூட தெரியவில்லை.
ஆயிரமாயிரம் இரத்தச் சாட்சிகள்.
மனிதம் மறித்த முள்ளி மணல் திட்டில், எந்த இறை மயிருக்கும் முகவரி இல்லை.

அழிவுக் கணைகளால் அழித்தன உலகக் கரங்கள்.
ஊருக்கு இளிச்சவாயன் அல்ல; இன்று உலகத்திற்கும் இளிச்சவாயன் - தமிழன்.
நாடு தோறும் பஞ்சையாய் பராரியாய் மட்டுமல்ல, நாடற்ற இனமும் நாமே.
கூட்டணி சாணக்கியம் தேர்தலுக்கு மட்டுமல்ல, போருக்கும் அது தான் என்று தெரிந்தும், இயலவில்லை.

எம்மைக் கண்டும் காணாத இனத் துரோகிகளே..
உங்கள் முகவரிகள் வரலாற்றில் என்றும் இழிவாய் நிலைக்கும்.
நாம் யாரையும் நோவதும், வேவதும் வீண்.
அவரவர் செய்வினை - அவரவர் தொடர்ச்சி.

உறங்கும் கண்களின் இமைகளைத் திறவுங்கள்.
உலகத்தின் பார்வைக்கு நம் நிலைக் காட்டுங்கள்.
அடுத்தக் கட்டத்திற்கு ஆழ்ந்து நகருங்கள்.
சூழ்நிலை புரிந்து சூதானம் தேவை.
எல்லாவற்றிக்கும் இறுதி உண்டு - தொடக்கத்திற்கென்று முடிவும் உண்டு.
மாற்றம் ஒன்றே மாறாதது.
நினைவில் இருக்கட்டும்:
காலம் என்பது கறங்கு போல் சுழன்று, மேலது கீழாய் மாற்றும் தன்மையது.



(கருத்தில் திருத்தம் இருந்தால் உதவுக)