என்னைப் பற்றி



1989 யூன் 14. பிரபாகரன். இது தான் அப்பா மொதல்ல வச்ச பேரு. அப்புறம் அருண் பிரபுவா மாத்திட்டாங்க. பொறந்தது மாயுரம் (மயிலாடுதுறை). தாத்தன் பூட்டனல்லாம் பெரிய தமிழ் இசை வித்வானுங்க. பொருளாதார சூழ்நில காரணமா நான் மூணாவது படிக்கும் போதே மெட்ராஸ் வந்துட்டோம்.

அப்பா, புருஷோத்தமன். கடவுள் மறுப்பாளர். மனிதாபிமானி. நண்பர்கள் கெடயாது. புத்தகங்கள் மட்டும் தான். இதுவரைக்கும் எனக்கு அவரு சொல்லி கொடுத்தது இது மட்டும் தான்நம்பாத, கேள்வி கேளு, படி.

அஞ்சாவது படிக்கும் போது கலியாண நிகழ்ச்சிகள்ல பலகுரல் பேசுவேன்.. அத பாத்து புடிச்சு போய் டி.வி.ல நடிக்க ஆசய தூண்டி விட்டாங்க.

விளைவு: சீரியல், சீரியல், சீரியல்: நடிப்பு, நடிப்பு, நடிப்பு: காசு, காசு, காசு!!!

கே. பாக்கியராஜ், கே. பாலசந்தர், சமுத்திரகனி, சி.ஜே. பாஸ்கர், சுந்தர் கே. விஜயன், கே. ராஜேஷ்வர், செல்வராகவன், தாய் செல்வம், பத்ரின்னு பல நல்ல/கெட்ட இயக்குனர்களோட.. பல நூறு எபிசோடுகள்.. 40/50 கதாபாத்திரங்கள்.. பல ஆயிரம் சீன்ஸ்.. தினமும் நல்ல சம்பளம்.

சினிமாவில் பத்து வருடங்களில் 15 படங்களில் வேல பாத்து கெடைக்க வேண்டிய அநுபவம் ஆறு வருஷ சீரியல் கத்து கொடுத்துச்சு.

ஒரு நாளைக்கு 17 சீன். மொத்தம் 32 ஆர்டிஸ்ட். டபுள் யூனிட் செட் அப். அதுல முக்கியமான 8 ஆர்டிஸ்டுங்க குவாட்டர் கால்ஷீட் தான்(மூனு மணி நேரம் தான் கால்ஷீட்டே!! ஒருத்தன் காலையில 3 மணி நேரம், இன்னொருத்தன் மாலையில..!!).. அந்த 8 பேருமே 17 சீன்லயும் இருப்பாங்க. எடுக்க வேண்டிய 17 சீன்கள்ல 4 சீன்களுக்கு மட்டுமே ஸ்கிரிப்ட் இருக்கும்.. இதுல ஒரு சீன அன்னைக்கே எடுத்து அன்னைக்கே டெலிகாஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நில.

சினிமா உருவாக்குதல் பத்தின அத்தன பயத்தையுமே தவிடு பொடியாக்கி ப்த்தூன்னு துப்ப சொல்லி கொடுக்கும் தொலைகாட்சி அநுபவம்.

திடீருனு ஒரு நாள் குரோசவா அறிமுகமானாரு.. 
 பத்தாவது படிச்சுட்டு இருந்தேன்.
நான்: காமேர்ஸ் எடுக்கவா? சயிண்ஸ் எடுக்கவா?
அப்பா: சினிமா தான எடுக்க போற.. அதுக்கெதுக்கு காமேர்ஸ் சயின்ஸெல்லாம்?! என்னவோ.. நீயே முடிவு பன்னிக்க.


பதினொன்னாவது படிக்கலஒரு வருசம் - வெறும் உலக சினிமா தான்.

சாப்ளின், கோடார்ட், ப்ரெஸான், கிடனோ, ஷாங் இமு, கிம்கிடுக், மஜித் மஜிதி, மக்மல்பஃப், சமீரா, ஜிம் ஜார்முஷ், மியாசகி, த்ரூஃபா, பொண்டெகார்வோ, ஒசு, குரோசவா, பெர்டலூச்சி, அல்மதோவார், வோங் கார் வாய், பொலன்ஸ்கி, தார்கோவ்ஸ்கி, கீஸ்லோவ்ஸ்கி, சுக்ரோவ், லார்ஸ் வான் டைர்ஸ், பெனிக்னி, கியெண்ஸ்டி நோர்பு...

சினிமாவிற்கான மொழியின் மீதான ஆளுமையும், திரைக்கதையாடலின் அந்தரங்க நுட்பமும் மனதில் தெளிவாக ஊறியது.

2006. ஒரு குறும்படம் எடுத்தன்.
பேரு "ஆடடா களத்தே". ஈழத்து இலக்கியங்கள படிச்சு.. அங்கத்திய பொடியள் சொல்ற நிதர்சனமான கதைகள கேட்டு பேயறஞ்ச மாதிரி கொஞ்ச நாள் ஒக்காந்திருந்தேன். இனியும் இத பத்தி எதுவும் பதிவு செய்யாம விட்டோமினா இனி வரப் போற சந்ததிங்க நாறிப் போற அளவுக்கு காரி துப்புங்குற பயத்துல எடுத்தது, "ஆடடா களத்தே". கூட இருந்த நண்பர்கள் (ராசாமதி, பாக்கியா, கிளைட்டன், ரமெஷ், சேது, விஜி, செல்வம், உதீப், யெஷ்வந்த், அப்பா) துணையோட நான், இயக்கி நடிச்சு தயாரிச்சது. கையில கொறச்ச காச வச்சிகிட்டு ஏதோ ஒன்ன எடுக்கப் போய்.. ஏதோ ஒன்ன எடுத்து.. ஏதோ ஒன்னா முடிச்சேன். இப்ப வேற யாருக்கும் போட்டு காட்டுறதுக்கு கூட கூச்சப்படற அளவுக்கு அமெச்சூரா எடுத்தது, இதோ உங்களுக்காக:




பிறகு, கல்லூரி வாழ்க்கை மீதிருந்த விருப்பத்தினால் லொயோலாவில் காட்சி தகவலியல் துறை மாணவனானேன்.

தந்தை. . ராஜநாயகம்.
உலகத்தில் இயற்றப்பட்ட அனைத்து நைய்யாண்டிகளையும் மிக மெலிதாக தோற்கடிக்கும் பார்வை.

என் இனிய நண்பர்களே, இதுவரை நீங்கள் தந்தை ச.ராஜநாயகத்தை பார்த்திரா விட்டால்..
உலகின் உன்னதமான, அதியசமிக்க, உலகின் உச்சகட்ட கிண்டல்களையும், நையாண்டிகளையும் தனது வாழ்வியல் முறையாக பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்கள் நிறைந்த மிக சாதாரணமான இளமை துள்ளும் மனிதனை இதுவரை நீங்கள் பார்க்க தவறவிட்டுவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

நான்: முழுவதுமாக, தந்தை ச. ராஜநாயகத்தின் மாணவன்.

மார்க்ஸ், ஃபராயிட், யூங், லக்கான், நீட்ஷே, ஃபோகால்ட்... ராஜநாயகம் பல வேறு உலகங்களை மட மடவென திறந்து விட்டார்.

"ஆடடா களத்தே" பல படைப்பாளிகளை/ வருங்கால படைப்பாளிகளை/இலக்கியவாதிகளை நண்பர்களாக்கியது. திரு. பாலு மகேந்திரா உட்பட.

உலக சினிமா, தத்துவம், உளவியல், உலக இசை, நாடகங்கள், இலக்கியங்கள், அரசியல், ஓவியம் என தேடல்கள் முழுவீச்சுடன் மூர்க்கத்தனமாக என் உழைப்பையும் நேரத்தையும் தின்றது.

கல்லூரிப் படிப்பு முடித்ததும்,
தமிழ் சினிமாவில் சினிமா இயக்கம் சார்ந்த தொழிற்முறை பணி செய்ய..
தமிழ் சினிமாவின் சடங்கு சம்பிரதாயங்கள் பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள..
லாபகரமான வியாபரத்தை செய்ய கையாளப்பட வேண்டிய அரசியல்கள் பற்றி தெரிந்து கொள்ள..
காரியம் கைகூடி வர இயக்குனர் பொறுத்துக் கொள்ள வேண்டிய/போட்டுத் தள்ள வேண்டிய ப்ரத்யேக தமிழ் சினிமா "நாகரீகங்கள்" பற்றி அநுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள...

இயக்குநர் "டாக்டர்". கே. எஸ். ரவிகுமார் அவர்களுடன் உதவி இயக்குநராக இணைந்தேன்!!!

முதல் படம்: கமல்ஹாசனின் "மன்மதன் அம்பு"
இரண்டாம் படம்: ரஜினிகாந்தின் "ராணா"

அசாதாரணமான வினோதமான குழப்பங்களுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இலட்சியமற்று, குறிக்கோள் தெரியாது, சுயம் இழந்து, கடவுள், காசு, மதம், மொழி, அரசியல், குடும்பம், புள்ளகுட்டி, ஸ்கூல், கல்யாணம், காதல், சாப்பாடு, செக்ஸ், சினிமா, கிரிகெட்டு, பெட்ரோல்ன்னு தலைய பச்சிகிட்டு சாவ நோக்கி பயணப்படற மனுஷங்களுக்காண சாதாரணமான அவசியமான சுவாரஸ்யமிக்க லாபகரமான சினிமா செய்யறதுக்கான வேலையில மும்முறமா இருக்கேன்.

என்னுடைய தோழமை உங்களுக்கு பயனளிக்கும்கிற அல்ப நம்பிக்கையோட எதிர்வினைதான் இந்த வலைப்பூ. உனக்கும் அதே நம்பிக்கை இருக்குமேயானால் என்னை தொடர்பு கொள்.

8 comments:

Cable சங்கர் said...

vaazththukkal arun

அருண் பிரபு said...

@ கேபிள் சங்கர்: நன்றி சர்.

பிரேம்குமார் அசோகன் said...

//காரியம் கைகூடி வர இயக்குனர் பொறுத்துக் கொள்ள வேண்டிய/போட்டுத் தள்ள வேண்டிய ப்ரத்யேக தமிழ் சினிமா "நாகரீகங்கள்" பற்றி அநுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள...
// -நிதர்சனம்.
நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள் அருண்!

அருண் பிரபு said...

@ prem kumaar.. thanks na.. :)

Anonymous said...

அருமை அருண்..வாழ்த்துகள் !!

அருண் பிரபு said...

@ படைப்பாளி : நன்றி அண்ணா.. இன்னும் நெறைய விசயம் புரியல.. ப்ளாக் கையாள்றது பத்தி நெறைய சந்தேகம் இருக்கு.. :( நிங்க தான் தெளிவு படுத்தனும்.

Vadielan R said...

ஒரு படைப்பாளி உருவாகிக் கொண்டிருக்கிறான் அவருக்கு என் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய படங்களில் பணி புரிய வாழ்த்துக்கள் விரைவில் புதிய படம் டைரக்ட் செய்யவும் பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்க்ம். www.gouthaminfotech.com

Vadielan R said...

ஒரு படைப்பாளி உருவாகிக் கொண்டிருக்கிறான் அவருக்கு என் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய படங்களில் பணி புரிய வாழ்த்துக்கள் விரைவில் புதிய படம் டைரக்ட் செய்யவும் பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்க்ம். www.gouthaminfotech.com