8/04/2011

பழைய புத்தகக் கடையில் -3 : (சிமெண்ட்டு காடுகளின் உஷ்ணத்தில் வாழ்வு பொசுங்குகிறது)



புத்தகத்தின் பெயர்: கத்துக் குட்டி

ஆசிரியர்: திரு. திருமயம் அழகுராஜன்


நகரம்.

சிமெண்ட்டு காடுகளின் உஷ்ணத்தில் வாழ்வு பொசுங்குகிறது..

யாருக்கும் யாரையும் தெரியவில்லை..

எட்டாண்டு வாழ்ந்தும் எதிர் வீட்டுக்காரர் தெரியாத நிலை..

பெற்றாரையும் உற்றாரையும் புரந்தள்ளுகிறது..

உறவுகள் முறிந்த ஆசிரமம் - அனாதை இல்லங்கள்..


ஆயினும்,

கிராமம் ஓர் சொர்கம்.. அது வெள்ளந்திகள் உலா மண்டபம்.

அங்கு மரங்களின் குளிர் நிழல்களே வாழ்விடம்.

தனிமனிதர்களோ தனிமையோ இல்லை. எல்லோருக்கும் எல்லாருமே உறவு.

தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன்,பேரன், பேத்தி, சண்டை, சமாதானம்..

கேலியும் கிண்டலுமாய் வாழ்வியல் சொக்கும் கிராமிய காட்சிகள்..


"என்ன தாத்தா.. வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்க? என் தாவனி அம்புட்டு புடிச்சிருக்கா?"

"ஏல.. நம்ம செவலி தான் சீவனத்து நிக்கால.. அதான் இந்த சின்ன சிறுக்கிய வளைக்கலாம்னு பாக்கன்.."

"ஏ கிழ கொடுக்கி.. உனக்கு இந்த வயசுல இம்புட்டு கேக்கா?! இரு இன்னைக்கு செவலி கையில சொல்லி கஞ்சிக்கு தவுடு காட்டுறன்.."

என சொல்லிட்டு ஓடுறவ கொஞ்சம் நின்னு..

"சரி சரி.. இந்தா.." னு மடியிலேர்ந்து ரெண்டு கொடுக்காபுலிய எடுத்து கொடுத்து போகும் இளஞ்சிறுசுகள்.


"ஏய்.. செவலி.. இன்னைக்கு குழ ஒடிச்சி போடுதன்.. குத்த வச்சி ஒரு பாட்டு ஒழுங்கா பாடல, அம்புட்டுதான்.. உன் மந்தாடு அம்புட்டும் திக்காளுக்கு கலச்சிடுவேன்.."


"ஏ கண்ணு பொன்னுதாயி.. என் சீம மவராசன்..

உன்ன சீதனமா கேக்காண்டி.."

"ஏ.. செவலி அப்படியே நிறுத்து. தோ குழகம்ப ஒடிச்சிட்டு வர்றேன்.."


வயசுக்கு வந்ததுக்கும் வயசு போனதுக்குமான சொலவடை சொல்லாடல் கேலிகளும் கிண்டல்களும் வாழ்வின் எல்லையை தொடும் பெரிசுகளுக்கு கிராமியம் வசந்தங்களாய் இனிக்கும்.


எனக்கு இந்த நகரங்களின் வெளியில் மார்கெட் வாசல் வெளிகளிலும், கடை தெரு ஓரஞ்சாரங்களிலும், கூறு கட்டி கீரை, காய்கறி, வெங்காயம், பூண்டு, பழங்கள் விற்கும் பாட்டிகளே மிகவும் பிடித்த வணிக மனிதர்கள். அவர்களை வம்பிற்கு இழுத்து பேரம் பேசுவதும்.. இறுதியில், கேட்டதை விட அதிகம் கொடுத்து அதுகள் முகத்தை ரசிப்பதும் எனக்கு அலாதி விருப்பம்.


"பேராண்டி நீ நல்லா இருப்ப.." ன்னு நெட்டி முறித்து உச்சி முகர்வதும்.. அந்த அழுக்கும் வாசனையும், அன்பின் கணிவும், இங்கும் நான் தேடும் சுகங்கள்.


கிராமங்களில், அனாதைகள் இருப்பதில்லை. இதோ ஓர் ஊர் பொதுக் கிழவி. இவள் பணியாரம் விற்பவள். இப்பணியாரக் கிழவி பற்றிய ஓர் கத்துக்குட்டி திரு. அழகுராஜனின் கவிதை இது. பழைய புத்தகக் கடையில் தோண்டி எடுத்த புதையல், இந்த..


பணியாரக் கெழவி


பணியாரக் கெழவி

இப்பவோ

அப்பவோன்னு

கெடக்காளாம்..


அம்மாசி

தாண்டுறது

செரமமாம்..,


செய்தியோடு

சேர்த்து

ஊகத்தையும்

இறக்கி வச்சுபுட்டு

நகர்ந்தாள்

மோர்க்காரி...


அடுத்த ஊரு

பேங்க்-ஐ விட

அதிகமா

கடன் கொடுத்தவ...

ஊரு பசிக்கு உடனடி

அட்சய பாத்திரம்

அவதான்


அவளுக்கு அப்பன்

ஆத்தா

வச்ச பேரு

ஒருத்தருக்கும் தெரியாது

ஆனா

ஊரு கூடி

வச்ச பேரு

பணியாரக் கெழவி...


எந்த ஊரு

என்ன சாதி

எவருங் கேட்டதில்ல

அவளுஞ் சொன்னதில்ல...


பணியாரம்

கேட்டு நின்னோமே தவிர

அவள்

பூர்வீகம் நாங்க

கேட்டதில்ல...


அறுவடை

சீசன்ல

களத்து தோசை

சுடுவா.. பாருங்க..

ச்...சோ...சும்மா

அப்படி இருக்கும்.


கீழே ஒன்னு

மேலே ஒன்னுன்னு

ரெண்டு தோசை...

அதுக்கு நடுவால

வெல்லத்தை வச்சு

ஒன்னாக்கி கொடுப்பா...


வாங்கிச் சாப்பிட்டுட்டு

காசு கொடுத்தா

எண்ணிப் பார்க்காம

இடுப்புல சொருகுவா...


நெல்லு கொடுத்தா

அளந்து பார்க்காம

சாக்குல போட்டுப்பா...


மோர்க்காரி ஊகம்

மோசமில்லை...


கணக்கா

அம்மாசி அன்னக்கி

முடிஞ்சு போச்சு...


தப்பு - கொம்புன்னு

ஊறே கூடி நின்னு


ஜாம் ஜாம்னு

மயானம் கொண்டு

போனோம்...


புதைக்கிற தானே

நம்ம சாதி வழக்கம்

மாறா எரிக்க

ஏற்பாடு ஆச்சு...

விசாரிச்சப்ப...


அடுப்புல தானய்யா

என் ஆயுசை ஓட்டினேன்

அதனால்

அடுப்புக்கே

இரையாகனும்னு

சொன்னாளாம்

கெழவி...


எனக்கு மனசு

கணத்துப் போச்சு


கீழேயும் மேலேயும்

வெறக அடுக்கி

ஊரே கூடி

கொள்ளி வச்சோம்...

மேலேயும்

கீழேயும் வெறகு


இரண்டுக்கு நடுவால

களத்துத் தோசையில


வெல்லக் கணக்கா

"பணியாரக் கெழவி"

முட்டி வெடிச்சிருச்சி...

அழுகை...


6 comments:

பலே பிரபு said...

ஆனால் இன்று கிராமங்கள் நிறைய மாறிவிட்டது. நகர தோற்றத்தை நாடி செல்லும் மோகம் எல்லோருக்கும் உள்ளது. விவசாயம் சுத்தமாக படுத்து விட்டது. (என் தந்தை ஒரு முன்னாள் விவசாயி இன்று கிணற்றில் நீர் இல்லாத காரணத்தால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எனக்கு இம்மியளவும் விவசாயம் தெரியாது.)

ஆனால் இந்த பாட்டிகள் விஷயம் இப்போதும் நடப்பது உண்டு. ஆம் கிராமங்களில் யாரும் அனாதை இல்லை. பாட்டிகளுக்கு நூறு பேரன்கள், பேரன்களுக்கு நூறு பாட்டி.


இந்த புத்தகம் எந்த பதிப்பகம்?

நாடோடி said...

பிரபு சொல்வது உண்மை தான்..

கிராமங்களும் இப்போது வெகு வேகமாக மாறிவருகிறது.. எப்பாடு பட்டாவது தனது மகனை படிக்க வைத்து நகரம் அல்லது வெளி நாடு அனுப்பிவிட வேண்டும் என்பதில் தான் பல அப்பாக்கள் இருக்கிறார்கள்..

பணியார கிழவின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் ஒரு கவிதையில்.. சிறப்பு..

நாடோடி said...

அருண் உங்க பதிவை என்னுடைய பஸ்ஸில் சேர் செய்கிறேன்.. :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

வயசுக்கு வந்ததுக்கும் வயசு போனதுக்குமான சொலவடை சொல்லாடல் கேலிகளும் கிண்டல்களும்//

நிஜமாகவே இதையெல்லாம் மிஸ் செய்கிறோம்.. மனம் விட்டு பேச முடிந்த ஆட்கள் வீதியெங்கும் , ஊர் முழுதும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

பகிர்ந்த நாடோடிக்கு நன்றி.

கோமாளி செல்வா said...

இது எந்த ஊரு பாசைங்க ? நானும் கிராமம்தான். ஆனா எங்க ஊருல இந்தமாதிரி வராது அதான் கேட்டேன்.

உண்மையில் கிராமங்கள் சொர்க்கம்தான். எதேனும் ஒரு காரணத்திற்காய் நகரப்புறங்களுக்கு வந்துவிட்டுத் திரும்பும்போதுதான் தெரிகிறது கிராமங்களின் அழகும் , அதில் வாழும் மனிதர்களின் அழகும்.

நகரமும் ஒன்றும் மோசமில்லை. இருந்தாலும் நகர வாழ்க்கையில் மனசாட்சியை ஒதுக்கிவைத்துவிட்டு சில செயல்களைச் செய்யவேண்டியிருக்கிறது :))