6/29/2011

அவன் - இவன் - நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன்.




(பழைய புத்தக கடையில்..)



"லோ பரி ல வண லாரியோ

மரிலு பாயாரோ - பாரி லாரியா நியா
லாபரியா நியா."


இப்பொருளற்ற எழுத்துக்கள் ஓர் நாகரிகக் கோமாளியின் நகை மொழிகள்.

புத்தகம் 1: கலைவாணர் சொற்பொழிவுகள்
தொகுப்பாசிரியர்: வே. குமரவேல்
பக்கங்கள்: 263

புத்தகம் 2: கலைவாணர்
தொகுப்பாசிரியர்: திரு. கழஞ்சூர் செல்வராஜ்
பக்கங்கள்: 823 (மற்ற பக்கங்கள் கிடைக்கவில்லை)


பழய புத்தக கடைகளில் இதுபோன்ற புத்தகங்களை இட்டு செல்பவர்கள் உண்மையிலேயே தியாகிகள் தான். படிக்க, படிக்க பல உண்மைகள் ஆழமாய் நெருட - உடனே பல கட்டுரைகளை எழுதத் துடிப்பு. காலவரட்சியால் இந்த ஒற்றை கட்டுரையாவது உடனே இடும் நிர்பந்த கடப்பாடு.

சார்லெஸ் சாப்ளினின் வாழ்வியல் எனக்கு தந்த ஆச்சர்யங்களைக் காட்டிலும் என்.எஸ்.கேவினுடையது மிக அலாதியாக இருக்கிறது. அதற்கான காரணம் அவர் நம்மவர் (தமிழர்) என்பதனால் இல்லை. உன்னதமான கலைஞனுக்கான அத்துனை அம்சங்களையும் நன்குணர்ந்து வாழ்ந்திருக்கிறார் மனிதர். நாடகம், திரை, கதைப்பாட்டு, வில்லுப்பாட்டு அனைத்திலும் மூட நோய் தீர்க்கும் ஈரோட்டு கசப்பு மருந்தை - நகைச்சுவையில் கலந்து எல்லோரையும் விழுங்க வைத்திருக்கிறார் என்.எஸ்.கே. சும்மா ஒரு சின்னஞ்சிறு சாம்பிளுக்காக அவரது சிந்தனைகள் சில:

"நாமுகன் நாவில் நாமகள் - உறைவது நிசமானால் மலசலம் கழிப்பது எங்கே? எங்கே?
கங்கையிலே குளித்தால் கர்மம் தொலையுமென்றால் - அதில் கத்தும் தவளைக்கும் மீனுக்கும் பேறு எங்கே?" (படம்: நீலகண்டர்)


"பரமசிவன் கி - பார்வதி, கங்கா தோ பத்னி ஹே.. எனக்கு ஒன்னும் நஹிஹே!! கியா கர்ண பஹ்வான்???" (படம்: பவளக்கொடி)

ஒளிவு மறைவின்றி பார்ப்பனியத்தை 'உத்தமபுத்திரனில்'..
போலிச் சாமியார் கபடங்களை 'இராமலிங்க சாமிகளில்'..
"ஏய் நூத்திப்பதினொண்ணு.. சட்டி தூக்கியும் - உன் புத்தி போகலியே.." என்றும்..
நந்தனை கிந்தனாக்கி, ஹரிசந்திரனை சந்திரஹரியாக்கி,
"கட்டுக் கதைகளை விட்டுத்தள்ளடா.. இல்ல உன் குட்டு வெளிப்படுமே" என்றும்..
சவுண்டிகளின் புராணிகப் புரட்டுகளை சவுக்கடி கொடுத்து விரட்டி, திரைப்பட தணிக்கைக்கும் தண்ணி காட்டிய - அவர் தகைமை ஓர் தனித்திறமை.

"சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க.. சொல்லிச்
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க..
குடிக்கத் தண்ணியில்லாம பெருங்கூட்டம் தவிக்குது - சிறு
கும்பல் மட்டும் ஆரஞ்சு பழ ஜூஸு குடிக்குது.." (படம்: மணமகள்)

"தாலிக்கயிறு தனியாயிருக்கும் - தங்கமிருக்காது..
தண்ணிக் குடிக்க தகரக் கொவள சொம்பும் இருக்காது..
பாலு வாங்க குழந்த பசிக்கு பணமுமிருக்காது..
பாழுங்கல்லை குடிப்பது மட்டும் நாளும் தப்பாது.

பாலு வாங்க பணமில்லேன்னா.. டீய குடிச்சுக்கோ..
டீயும் கெடுதல்லுன்னு தெரிஞ்சா மோர குடிச்சுக்கோ..
மோரும் நமக்கு கெடக்கலே.. நீராகாரம் இருக்கவே இருக்கு - அத
குடிச்சு பழகனும்."

"மறைவரோடு பள்ளுப் பறையரையேற்றி ஜாதி மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே!!"
என்று கிந்தன் சரித்திரதில் ரயிலை புகழ்கிறார், நம் சீர்திருத்த கோமாளி.

"இயல்பான உண்மையை அழகுப்படுத்திக் காட்டுவதே கலை. ஔவை கூழுக்கு பாடினாள்; பாரதி ஏழ்மையில் கவிதை தந்தான்; 95% தரித்திரத்திலேயே தான் கலை பிறக்கிறது" என்று தரித்தரத்துக்கு வக்காளத்து வாங்கியவர் என்.எஸ்.கே. வரும் பணத்தையெல்லாம் அள்ளிக் கொடுத்து வெறும் கையினாய், தரித்திரத்திலேயே பிறந்து தரித்திரத்திலேயே மறைந்த கலைஞன். மெட்ராஸ் - தியாகராஜா நகர் - வெங்கட்ராமய்யர் தெரு - 6ஆம் நம்பர் இல்லம் : உதவி நாடியவருக்கு ஒரு எளிய ஷேத்திரம்.

தனக்கென வாழ்ந்து வரும் மனிதர்களின் மத்தியில் வாழ்க்கை எதற்கு? என்று கேள்வி கேட்டுக் கொண்டே வாழ்ந்து காட்டிய கோமாளி.
மக்களுக்காக வாடிய இம் மாசறு கிறுக்கனை, 'கொடுத்து கொடுத்து ஏமாளியானவர்', 'பிழைக்க தெரியாதவர்', 'வாழ தெரியாதவர்' என கேலி செய்தவர் பலருண்டு.
அவர் ஒன்றும் வாழத் தெரியாதவர் அல்ல என்றே தோன்றுகிறது.. அவர் தான் வாழத் தெரிந்தவர்.
இன்றும் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கலையுலகின் கேவங்கள்:


இன்றைய நிலையில் தமிழ்த் திரைத் துறை எலும்பும் தோலுமாய் வீம்பி வீங்கிய வயிற்றுடன் உயிரைக் கண்ணில் வைத்திருக்கும் சீக்கு பிடித்த எதியோப்பிய குழந்தைப் போல மூச்சித் திணறிக்கொண்டிருக்கிறது. கலைத் திறன் இல்லா கழிசடை வாரிசை நாயகனாக்கி முதலீடு செய்து, படமும் எடுத்து, back up குடுத்து, தளபதியே! எதிர்காலமே! தலைவா! புரட்சியே! என பிளக்ஸுகள் நிறுத்தி, மன்றங்கள் எழுப்பி பன்றியை யானையாய் மார்கெட் பன்னும் குறளி வித்தையால் குளைந்திருக்கிறது கோலிவுட்.

சூத்திரகயிற்று விசையில், சுழன்றாடும் காகித பொம்மைக்கு ஆயிரம் பொய் முலாம் பூசி "அவனையும் இவனை"யும் திரைப்படுத்தி மக்களின் காசை உருவ மண்டையில் மயிற் புடுங்குகிறார்கள்.

இத்தகைய கலை ஊழலை 1950களிலேயே என்.எஸ்.கே. வெளிச்சம் போட்டு வீதிக்கு கொண்டுவந்துள்ளார். அன்றைய தமிழ் திரைப்படங்கள் பல பட்டிக்காட்டு பெண்ணைப்போல பதுங்கி டப்பாவுக்குள் ஒளிய காரணமென்ன? என்று கேட்ட கேள்விக்கு பதிலும் தருகின்றார்:

"கலையுலகில் ஒரு திணுசான இன்ஃப்ளுயன்ஸா பரவி விட்டது. யாருக்கும் எதையும் செய்யலாம் என்ற அசட்டு துணிவு வந்துவிட்டது. புது சிந்தனையே காணோம். எங்கெங்கு நோக்கினும் சிபாரிசு பேய் தான் தலை விரித்து ஆடுகிறது. அவருக்கு இவர் வேண்டியவர்.. இவருக்கு அவர் வேண்டியவர்.. என்ற முறையில் தான் அநேகர் அநேக படங்களில் அலுவல் புரிய நேரிடுகிறது. சிபாரிசு மூலமாக முன்னுக்கு வர நினைப்பவர்கள் அவசரக்காரர்கள். இதே அவசர புத்தி, அவர்களின் படைப்புகளிலும் தலைக்காட்டி கடைசியில் கலையையே கெடுத்து விடுகிறது."

"நான் மட்டும் இயக்குநர்கள் கைகளில் மட்டும் அகப்பட்டுக் கொண்டிருந்தால் என்னை இரக்கமில்லாமலேயே பாதாளத்தில் அமுக்கியிருப்பார்கள்."

"தற்பொழுது சில படங்களில் வரும் வில்லன்களைப் பார்த்தால் கூட எனக்கு கோபம் வருவதில்லை; காமெடியன்களைப் பார்த்தால் அவ்வுளவு கோபம் வருகிறது."

"கலை கலைக்காகவே என்கிறார்கள். இது உணவு உணவுக்காகவே என்பது போல் இருக்கிறது. கலை வாழ்க்கைக்காகத் தான்."

இவைகள் கலை பற்றி கலைவாணரின் நிலை மட்டுமல்ல.. உலக கலை கர்த்தாக்களின் நிலைப்பாடுகளும் கூட.

தமிழ் நாட்டுக்கு சேவை செய்த நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன் காலி செய்த இடத்தை என்றும் இன்னொருவர் ஈடு செய்ய முடியாது - அறிஞர் அண்ணா.









6/23/2011

திருவடி சரணம்.



(குத்தீட்டி ஒன்று குத்துகிறது இதயத்தில்)

இரண்டு நாட்களாய் வலை முழுவதுமே சாருவின் செக்ஸ் சாட் பற்றிய திட்டுக்களே. எதார்த்தமாக செக்ஸ் சாட் செய்து மாட்டிக் கொண்ட சாருவை, ஃபேஸ் புக்கில் திட்டுவதன் மூலம் நம்ம 'ஃப்ரெண்ட் லிஸ்ட்டில்' இருக்கும் ஏதாவது ஒரு சுமார் ஃபிகராவது 'லைக்' கொடுக்காதா என்ற ஏக்கத்துடன் அலைகிறார்கள் "இலக்கிய தேடல்" ஏகும் ஆண் வலை நண்பர்கள். "டபுள் லைக்" கொடுக்கிறார்கள் பெண்கள். என்னத்த சொல்ல?

ஃபேஸ் புக், இண்டர் நெட், ப்ளொக் ஸ்பாட், கதை, கவிதை, கட்டு
ரை - எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் எழுதி தீர்த்துவிட்டார்கள். புதிதாய் சொல்ல எதுவும் இல்லை. எழுத்தையே கலையாக, காசாக்கி ஜீவனம் செய்பவர்கள் கூட, எழுத்தை ஆள முடியாமல் தவிக்கும் நிலை. எங்கேயோ படித்தது, எங்கேயோ மறந்தது, எங்கேயோ சுவைத்தது, எங்கேயோ கொரித்தது. எல்லோரும் சொல்லவும் எல்லோரும் எழுதவுமான கணிணி வலையில் சிக்கி நிலை தடுமாறும் நிலையில்..

இன்று:
குத்தீட்டி ஒன்று குத்துகிறது இதயத்தில்.
காட்சியின் கோரத்தில் திடுக்கிட்டு மடிகின்றேன்.
உறக்கத்தைக் கெடுக்கும் உள்ளத்தின் வலி, ஆராது ஆராது; அழுதாலும் தீராது.
சொன்னால் துக்கம்; சொல்லாவிடில் இறுக்கம் - இரட்டை நிலை.
காலத்தின் கட்டாயமாய், இனத்திலே பிறந்த இழிமை.
ஏது சொல்ல? ஏதும் இயலா கையறு கயவனாய், நான்.
முள்ளி நிகழ்விற்கு பிறகு, இன்றும் அடங்க மறுக்கிறது - ரத்த கொதிநிலை.
சாந்தமும் அமைதியும் கொதி நிலையில் குழைந்து மறைகிறது.
எனக்குரிய பொறுப்பிற்காய், என்னை நசுக்குகிறேன்; இயல வைக்க திணருகிறேன்.
எல்லா யன்னலைகளையும் மூடி விட்டேன். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டேன்.
மின்மினியாய் ஒளிரும் டி.வி. சிக்னலை அழுத்தி அணைத்தேன்.
குருட்டு பூனையாய் இருட்டிலே ஒடுங்குகிறேன்.

சம்மட்டி அடியாய் தலை வலி பிளக்கிறது.
என்னை விடுங்கள்.
என்னிடம் யாரும் பேசாதீர்கள்.
எவருக்கும் என்னிடம் வேலை இல்லை.
அனைவரும் இருந்தும் பலி கொடுத்து விட்டீர்கள்.
அருகில் வராதீர்கள்.
ஓடுங்கள், எல்லோரும்.
உங்களைப் போல கேடான மனிதர் உலகில் இல்லை.
ஏன் வெறுக்கின்றேன்?
ஏன் விரட்டுகின்றேன்?
எதை இழந்த போதும் இவ்வுளவு குமுறியதில்லையே.
என் தாயை இழந்தால் கூட, இது அளவு வெடித்து சிதற வாய்ப்பில்லை.
காடு மேடு சொந்தம்; காணும் யாவும் சொந்தம்; கூடும் இல்லை; குஞ்சம் இல்லை.
அழுது அழுது கதறி என்ன? எவ்வித விடிவிற்கும் முடிவிற்கும் தெளிவில்லை.

கழுகும் ஒதுக்கிய பிணங்கள்;
நாயும் வெறுத்த கவுச்சி;
கருகி உருகி கூழாய் சிதைந்த உருவங்கள்;
இயற்கை நிகழ்வு அல்ல - இது மாந்தம் கொன்ற செயற்கை சதி.

முள்ளிவாய்க்கால் - நம் தலையில் விழுந்த பேரிடி;
அதுவே நம் தலைமுறைக் காப்பாற்றும் திருவடி.

உலகப்போர்கள் காணா கொடுமைகள்;
ஹிரோஷிமா நகசாகி சொல்லாத காவுகள்;
ரவுண்ட்ஸ், ஷெல், கிவிர், எரிகணை, பொஸ்பொரஸ், கொத்து... சில பலியாயுதங்களின் பெயர்கள் கூட தெரியவில்லை.
ஆயிரமாயிரம் இரத்தச் சாட்சிகள்.
மனிதம் மறித்த முள்ளி மணல் திட்டில், எந்த இறை மயிருக்கும் முகவரி இல்லை.

அழிவுக் கணைகளால் அழித்தன உலகக் கரங்கள்.
ஊருக்கு இளிச்சவாயன் அல்ல; இன்று உலகத்திற்கும் இளிச்சவாயன் - தமிழன்.
நாடு தோறும் பஞ்சையாய் பராரியாய் மட்டுமல்ல, நாடற்ற இனமும் நாமே.
கூட்டணி சாணக்கியம் தேர்தலுக்கு மட்டுமல்ல, போருக்கும் அது தான் என்று தெரிந்தும், இயலவில்லை.

எம்மைக் கண்டும் காணாத இனத் துரோகிகளே..
உங்கள் முகவரிகள் வரலாற்றில் என்றும் இழிவாய் நிலைக்கும்.
நாம் யாரையும் நோவதும், வேவதும் வீண்.
அவரவர் செய்வினை - அவரவர் தொடர்ச்சி.

உறங்கும் கண்களின் இமைகளைத் திறவுங்கள்.
உலகத்தின் பார்வைக்கு நம் நிலைக் காட்டுங்கள்.
அடுத்தக் கட்டத்திற்கு ஆழ்ந்து நகருங்கள்.
சூழ்நிலை புரிந்து சூதானம் தேவை.
எல்லாவற்றிக்கும் இறுதி உண்டு - தொடக்கத்திற்கென்று முடிவும் உண்டு.
மாற்றம் ஒன்றே மாறாதது.
நினைவில் இருக்கட்டும்:
காலம் என்பது கறங்கு போல் சுழன்று, மேலது கீழாய் மாற்றும் தன்மையது.



(கருத்தில் திருத்தம் இருந்தால் உதவுக)

6/16/2011

பழைய புத்தகக் கடையில் -2 : (றோம், றோம், றோம்)

புத்தகத்தின் பெயர்: ஏழாவது அறிவு (கட்டுரைகள்)


எழுத்தாளர்: வெ. இறையன்பு

உலகின் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் அநுபவத்தில் இக்கால மனிதர்களே மிகவும் வினோதமான ஜீவராசியாக இருக்க முடியும். இவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளும், இடர்பாடுகளும், குழப்பங்களும் வேறு எந்த உயிரினங்களுக்கும் இருந்ததில்லை. கம்யூட்டரின் முன் ஃபேஸ் புக்கின் வாயிலாக வாழ்கிறோம். நமக்கு மட்டுமே இவ்வுளவு குழப்பங்கள். நாம் மட்டுமே ஈஷா யோகாவில் சேர்கிறோம். நீங்க யாராவது இந்த யோகா வகுப்புக்கெல்லாம் போயிருக்கீங்களா?! ஈஷா மாதிரியான எல்லா வணிகர்களின் சாராம்சமும் ஒன்று மட்டுமே: வாழ்வது எப்படி?

உலகிலேயே சிரிப்பது, உண்பது, தூங்குவது, சும்மா இருப்பது, பார்ப்பது, மூச்சு விடுவது - இதுக்கெல்லாம் பணம் கொடுத்து பயிற்சிக்கு போற முட்டாள்கள் நாமாகவே இருக்க முடியும். வேறு எந்த உயிரினமும் சும்மா இருப்பது எப்படி? என்பதற்காக 6375/- ரூபாய் செலவு செய்வதில்லை.

அவ்வுளவு குழப்பம். வாழ்க்கையை வாழ தெரியாதவர்களாக நாம் நம்மை மாற்றிக் கொண்டுள்ளோம். கேள்வி எழுப்புதல் என்பதே நமது இருத்தலின் நிலைபாடென்பதை நாம் மறக்க விரும்புகிறோம். உணர்தல் நம்மிடம் இல்லாமல் போவதற்கான அத்தனை முயற்சியிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். கிட்டதட்ட, நாம் எதையுமே உணருவதில்லை. இயற்கையான பொழுதுகள் நம்மிடையே அழிந்த படியே வருகிறது. இயற்கையாக கேள்விகள் ஊற்றெடுப்பதே இல்லை என்பதால், நாம் குழப்பங்களுக்குள் வாழ்கிறோம்/சாகிறோம். சுயத்தை பற்றி எவ்வித கவலையும் நமக்கு இருப்பதாக தெரியவில்லை. நம்மை சுய நலம் சார்ந்தவர்களாக காட்டிக்கொண்டால் நம்மை சமூகம் அசிங்கமாகப் பார்க்கும் நிலை இருப்பதாக நினைத்து குழப்பிக்கொள்கிறோம்.

குழப்பங்கள் அதீதமாகும் போது, நாம் ஏதுமற்றவர்களாய் மாற முற்பட்டு, வேறொருவர் சொல்லை முழுவதுமாக பின்பற்ற தொடங்குகிறோம். அதை கேள்விக் கேட்பதும் இல்லை. சிறு வயதிலிருந்தே நாம் அதற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்கிறோம். கும்பிடுன்னா கும்பிடுறோம். வணக்கம்வைன்னா வணக்கம் வைக்கிறோம். சிரின்னா சிரிக்குறோம். தூங்குன்னா தூங்குறோம். எழுந்திரின்னா எழுந்திரிக்கிறோம். படின்னா படிக்கிறோம். றோம். றோம். றோம். றோம். றோம். றோம்.றோம். றோம். றோம். றோம். றோம். றோம். சுயமும் போச்சு; மரியாதையும் போச்சு.

இறையன்புவின் இப்புத்தகம் ஒன்னும் அற்புதமான புத்தகம் இல்லை. நீட்சே, ஃப்ராய்ட், லக்கான், யூங், லா ஓட்சு போன்றோரின் எண்ணங்கள் அளவிற்கு தெளிவானதாக இப்புத்தகத்தில் எதுவுமே இல்லை. இருப்பினும், இறையன்பு அவர்களின் பகிர்தல், அவர் படித்த விசயங்களின் பதிவு, சுவாரஸ்யமான வாழ்வியல் கேள்விகள் உருவாகும் கதைகள் என இப்புத்தகத்தில் பல விறு விறுப்பான எண்ணங்கள் இருக்கவே செய்கிறது. உதாரணமாய் "பிராத்தனை" எனும் தலைப்பில் அவர் குறிப்பிடும் கட்டுரை, உங்களுக்காக:

பிராத்தனை - இறையன்பு

சடங்குகள், பூஜைகள், வழிபாடுகள் இவற்றையும் மீறியது பக்தி. சடங்குகள் பக்தி செய்கிறோம் என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி நம்மை மகிழ்ச்சியட்ஐயச் செய்கின்றன. புனித தளத்திலே நீராடினால் நம் பாவங்களையெல்லாம் கரைந்துவிடும் என நினைத்து, தெரிந்தே பாவங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

கபீர் தன்னுடைய தோஹேவில் "புனிதத் தலங்களில் நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்று சொன்னால், அங்கு ஏற்கனவே வசித்த்துக் கொண்டிருக்கும் மீன்களுக்கும், தவளைகளுக்கும் இன்னேரம் மோட்சம் கிடைத்திருக்க வேண்டுமே!" என்று கிண்டலாக கிறிப்பிடுவார்.

Scape goat -பலிகடா என்கிற வார்த்தை எப்படி வழக்கில் வந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமான செய்தி. யூதர்களுடைய குரு ஒரு விசேச நாளில் யூதர்களுடைய பாவங்களையெல்லாம் ஒரு ஆட்டின் நெற்றிக்கு மாற்றுவார் - அந்த ஆடு பாவம் - மனிதர்கள் செய்த எல்லா குற்றங்களையும் சுமந்துகொள்ள்உம் - பிறகு ஆட்டைப் பலி கொடுத்து அந்த ஆட்டின் எல்லா பாவங்களையும் போக்குவார்கள் - அந்த ஆட்டைப் பலி கொடுத்தால், தங்கள் எல்லோருடைய பாவங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம்.

அதைப்போலவே, Whipping Boy என்கிற பதமும் பயன்படுகிறது. இளவரசனைப் படிக்க அனுப்பும் போது, அவனுடன் இன்னோரு மாணவனும் அனுப்பப்படுவான். இளவரசன் தவறு செய்தால் அவனை அடிக்க முடியாது. ஆனால் ஆசிரியர் கண்டிக்காமல் இருக்கவும் முடியாது. கண்டிக்காவிட்டால் ஆசிரியர் ஆசிரியர் திருப்தியடைய முடியாது. ஆசிரியருக்கும் திருப்தி ஏற்பட வேண்டும்; இளவரசனும் அடிபடக் கூடாது. எனவே, ஆசிரியர் இளவரசன் மீது கோபம் வரும் போதெல்லாம் உடன் இருக்கும் மாணவனை அடிப்பார் - அவன் தான் 'சவுக்கடி பையன்'.

நமது சடங்குள் மாயத்தோற்றம் ஏற்படுத்தி, நமது முனேற்றத்தைத் தடை செய்கின்றன. ஆன்மிக வாழ்வில் மட்டுமல்ல சாதாரண - தினப்படி வாழ்விலும் போலியான விசயங்கள் நம்மை எளிதில் கவர்ந்துவிடுகின்றன. நாம் உண்மையான செய்திகளை விட்டு விட்டுப் போலியானவற்றின் கவர்ச்சியில் திளைத்து விடுகிறோம். யார் போலியான அழகில் சிக்காமல் முன்னேறுகிறார்களோ, அவர்கள் உண்மையான அழகைக் கண்டுபிடிக்கிறார்கள். அது எவ்வுளவு தத்ரூபமானது, ஆழமானது, ஆனந்தமானது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

சினிமாக்களில் கூட, போலி சினிமாக்களைத் தாண்டினால், நல்ல சினிமாக்கள் கிடைக்கின்றன. இலக்கியங்களில் போலி இலக்கியங்களைத் தாண்டினால், நல்ல இலக்கியம் - மேன்மையான இலக்கியம் அகப்படுகிறது. உடல் அழகைக் கடந்து உட்புகுந்தால், உண்மையான உள்மையம் தெரிகிறது. அதைப் போலவே, சடங்குகளைத் தாண்டினால், தியானம் நிகழ்கிறது.

ஓர் இளைஞன் மிதிவண்டியில் மார்க்கெட்டுக்குச் சென்றான். அங்கே மிதிவண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கச் செல்கிறான். அங்கே மிதிவண்டியைத் தான் பூட்டாமல் விட்டது நினைவுக்கு வருகின்றது.மிதிவண்டியஇ நிறுத்திய இடத்திற்கு ஓடி வந்து பார்க்கிறான். மிதிவண்டி நிறுத்திய இடத்தில் அப்படியே இருக்கிறது. பக்கத்திலேயே ஒரு கோயில். ஓடி ஆண்டவனுக்கு மனமார நன்றி சொல்லி விட்டு வருகிறான் - சைக்கிளைக் காணவில்லை.

6/11/2011

சன் மியூசிக்கில் வரும் பாடல்களில் என்ன பிரச்சனை?!



தமிழ் சினிமாவின் இசைதான், பொதுவாக தமிழ் மக்களின் இசையாக கொண்டாடப் பெறுகிறது. அவ்வாறே, தமிழ் சினிமா பாடல்கள்தான், பொதுவாக தமிழ் மக்களின் கவிதைகளாக/பாடல்களாக கொண்டாடப் பெறுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தமிழச்சியின்/மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை கொண்டாடுவதைக் காட்டிலும், சன் மியூசிக் மற்றும் இசையருவியில் வரும் நா.முத்துகுமார், மதன் கார்க்கி, பா.விஜய் போன்றோரையே ரசிக்கிறோம்.
தனிப்பட்ட முறையில், என்னால் தமிழ் சினிமா பாடல்களின் வரிகளை அதிகமாக ரசிக்க முடிவதில்லை. காரணம், அனேகமான பாடல்களில் சாதாரணமான மனித வாழ்வியல் தத்துவங்கள் இடம் பெறுவதாக தெரியவில்லை. பொதுவாகவே காதல் மற்றும் காமத்தினை பற்றி எழுதுகிறார்கள். மனித நேயமற்ற, உணர்வுகளற்ற, எவனென்றே தெரியாத ஒருவன் வாசிச்சதை, காப்பி அடிக்கப்பட்டு உருவாக்கப்படற, நாராச சப்த
ங்களாலேயே நிரப்பப்படிகின்றன, தற்பொழுதைய தமிழ் சினிமாவின் முக்கால்வாசி இசை. அதேபோல, உதவாத உவமைகளாலேயே நிரப்பப் படுகின்றன, தற்பொழுதைய தமிழ் சினிமாவின் முக்கால்வாசி பாடல்கள்.
உவமைகள் புரிய வைப்பதற்காக பயன்படுத்தப் படும் போது மட்டுமே, அதை சகித்துக் கொள்ள முடிகிறது. புரிய வைப்பதற்காக அன்றி, உவமையின் அழகிற்காகவே, உவமை பெரும் பாலான பாடல்களில் இடம் பெறுகிறது. ஒரு கலைப்படைப்பின் அழகு அதன் பயன்பாட்டின் மூலமாகவே அளவிடப்படும்.
எதை நாம் அழகு என்கிறோம்? எதை நாம் அழகியல் என்கிறோம்? நமது மனது அப்பட்டமான வியக்கத்தக்க நுன்னிய உண்மைகளை தெரிந்து கொள்ளும் போது - பரவசப்படுகிறது.. உணர்வு கொள்கிறது. அவ்வித உணர்வுகளே ரசனையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ரசனைகளின் கூட்டு, பிறகு அழகியலாகிறது. எனவே, ஒ
ரு கலைப்படைப்பின் அழகென்பது படைப்பு வெளிப்படுத்தும் உணர்வைக் காட்டிலும், அப்பட்டமான உண்மை சார்ந்ததாகவே இருக்கிறது.
அழகு என்பதே உண்மை சார்ந்த விஷயமாக இருக்கும் போது, முட்டாள்தனமாக நாமெல்லாம் - கலை என்பது பொய்களால் நிரம்பபெற்றதாகவும், அதீத கற்பனை சக்தி பெற்றவனே நல்ல கலைஞன் என்றும், பொய்யை வெளிப்படுத்துவதே அழகென்றும், அதீத எதார்த்தமற்ற உணர்வுகளின் வெளிப்பாடே அழகிய கலை என்றும், கவிதைக்கு பொய் தான் அழகு என்பது போல ஒரு மிக தவறான பார்வையை ஒரு சேர பின்பற்றுகிறோம்.
அதை கண்மூடித்தனமாக பின்பற்றுவதனாலேயே, நம்மால் காலம்காலமாக அதே நிலாவையும், வண்ணத்து பூச்சிகளையும், பூக்களையும், கூந்தலையும், மேகத்தையும், சூரியனையும், பெண்ணையும், காதலையும் இழுக்காமல் கவிதைகள் எழுதவே முடிவதில்லை.
மனதில் இயற்க்கையாக வெளிப்படுத்த நினைக்கும் வார்த்தைகளை நாம் கவிதைகளில் பயன் படுத்த தயங்குகிறோம்.. ஏதோ வாங்குற நாப்பதாயிரம் அம்பதாயிரம் பணதுக்கு சடசடன்னு ஹிட் ஆகுனுங்கிற நம்பிக்கையோட மிக கொறஞ்ச நேரத்திலேயே எழுத தள்ளப்பட்டிருக்கிறார்கள் நமது பாடலாசியர்கள். நமது பாடலாசிரியர்கள் பாவப்பட்டவர்களே. இப்போதைய பாடலாசிரியர்களுக்கு முன்பைக் காட்டிலும் போட்டிகள் அதிக
மாகிவிட்டன. எனவே, வணிக ரீதயாக வெற்றிப் பெறுவதற்கும், பாரிய அளவில் பிரபலமாவதற்கும் ஏற்ப்புடைய பாடல்களாகத்தான் அவர்கள் எழுத வேண்டியுள்ளது.
ஒரு பிரபலமான இசை அமைப்பாளன் ஒரு பாடலுக்கு வாங்குவதில் நாற்பதில் அரை மடங்கு சம்பளம் கூட ஒரு பிரபலமான பாடலாசிரியனுக்கு கொடுப்பது இல்லை. ஒரு பாடலாசிரியனுக்கு தோராயரமாக 3 அல்லது 4 நாட்களே கொடுக்கப் படுகின்றன. இங்கு கெட்ட பாடல்களைக் காட்டிலும் கெட்ட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இவ்விதபோக்கில், திறம் மிக்க நல்ல இசையும் அரிதாகி விட்டது; மனிதர்களுக்கு அவசியப்படும் வாழ்வியல் தத்துவங்களும் அரிதாகி விட்டது.
பொதுவாகவே தத்துவம் என்றதும் வாழ்வு பற்றிய புலம்பல்களாகவே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். தத்துவத்திற்கும் புலம்பல்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. நம்முடைய தத்துவம் எம்பது, நாம் தத்துவம் எனக் கூறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவது இல்லை; மாறாக அது நாம் தேர்வு செய்யும் விஷயத்தினால் வெளிபட்டுத்தப்படுகிறது; நமது தேர்வு வாழ்வின் மீதான நமது பொறுப்புணர்வு சார்ந்தது.
இங்கு, நமது இப்போதைய தமிழ் சினிமாவில் தத்துவார்த்தங்கள் வெளிப்படும் பாடல்கள் இல்லாமலேயே போய் விட்டதாக தோன்றுகிறது. அவ்வப்போது, ஏதேனும் ஒரு சில வரிகள்.. அவ்வளவே. சமீமத்தில் வெளிவந்ததில் "தமிழ் எம்.ஏ.," , "புதுபேட்டை", "ஆயிரத்தில் ஒருவன்", "நான் கடவுள்", "அது ஒரு கனா காலம்" போன்ற வெகு சில சினிமாக்களின் பாடல்களில் மட்டுமே தெறித்ததது, சாதாரண மக்களுக்கான எளிமையான, எதார்த்தம் மீறாத உண்மை நிறைந்த தத்துவங்கள்.
இருப்பினும், ந
மது தத்துவப்பாடல்கள் அனைத்துமே சோக கீதங்களாக அமைக்கப்படுவது, ஒரு தவிர்க்கமுடியாத ஒரு விதி போல பின்பற்றப்படுகிறது. உண்மையில் தத்துவங்கள், உண்மையை சார்ந்த தேடல்களின் விளைவுகள். அது மிகவும் சுவாரஸ்யமானது; அனுபவப்பூர்வமானது; மிக முக்கியமாக நகைச்சுவை மிக்கது. எந்த தத்துவங்களும் ஒரு சிறு சந்தேகத்தின் தொடர்ச்சியாகவே கண்டு பிடிக்கப் படுகிறது. அந்த பயணம் மிக நையாண்டித்தனமானது. ஆனால், நமது சாபக்கேடு- நமக்கு, சாதாரண மனித வாழ்வியல் தத்துவங்களை நகைச்சுவையுணர்வோடு பதிவு செய்யும் பாடலாசிரியர்கள் மிகவும் சிலரே வாய்த்திருக்கிறார்கள். அதில், ஒப்பற்றவர் - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். மிக குறுகிய அறிமுகத்தை ஏற்படுத்தும் எடுத்துக் காட்டு பின்வருமாறு:

குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்கு சொந்தம்!
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டு கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி
பார்க்
கபோனால் எட்டடிதான் சொந்தம்!
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?
உலகத்துக் கெதுதான் சொந்தமடா?!
மனகிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதி மந்தமடா!

செவரு வச்சுக் காத்தாலும், செல்வமெல்லாம் சேர்த்தாலும்,
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தகாரன் யாரு?
நீ துணிவிருந்தா கூறு!

ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்க போனார் பாரு! அவரு
எங்க போனார் பாரு!!
பொம்பள எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணா - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்.!!
*******

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங்
கூட்டிருக்குது கோனாரே! இதை
ஓட்டி ஓட்டி திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே!!
கணக்கு மீறி தின்றதாலே கனத்த ஆடு சாயுது- அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது..
பணக்கிறுக்குத் தலையிலேறி பகுத்தறிவுந் தேயுது- இந்தப்
பாழாய் போன மனிதக்கூட்டம் தானாய் விழுந்து மாயுது..
ஆச என்ற பம்பரத்த உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு..
இத படித்திருந்தும் மனக்குரங்கு பழைய கிளைய பிடிக்குது,
பாசவலையில் மாட்டிகிட்டு வௌவால் போல துடிக்குது..
நடக்கும் பாதை புரிந்திடாமல் குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப் பானை போன்ற வாழ்வை துடுக்குப் பூனை ஒடைக்குது.
*****

நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடுவிலிருக்கும் சாமி - நீ
கல்லாய்ப் போன காரணத்த எல்லாருக்கும் காமி!
******

முடியிருந்தும் மொட்டைகளாய் மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்துகிடக்க போறீங்களா?
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகள எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க? என்ன பண்ணிக் கிழிச்சீங்க?!
********

ஆடி ஓடி பொருளத்தேடி, அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்..
அதிலே இதிலே பணத்தைச் சேத்து வெளியிட பயந்து மறச்சுவைப்பான்..
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை ஆருக்கும் சொல்லாம பொதச்சு வைப்பான்..
ஆகக் கடைசியில குழிய தோண்டி -
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்.
********

நல்ல வழியில வாழ நெனச்சு நாயா அலையாத - அது இந்த
நாளில் முடியாதே..
நரியப் போலே எலியைப் போலே நடக்க தெரிஞ்சிக்கனும்- தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு! உள்ளம் அழுக்குங்க - அதுலேதான்
உலகம் கெடக்குங்க - இது உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்ல - உள்ளத சொன்னா குத்தமில்ல.
********
கடைசியாக,
மிக வலிமையான மொழியியல் ஆளுமையைக் காட்டிலும், மிக நுன்னியமாக உணர்வுகளை வெளிக்காட்டுவதைக் காட்டிலும், ஹிட்டாகக் கூடிய வினோத சப்தம் நிறைந்த வார்த்தை வித்தைகளைக் காட்டிலும் - அப்பட்டமாக எழுதக்கூடிய சாதாரணக் கவிஞர்களே இப்போதைய தமிழ் சினிமாவின் தேவையாக தோன்றுகிறது. கவிபேரரசுகளைக் காட்டிலும், வித்தக கவிஞர்களைக் காட்டிலும், மக்கள் கவிஞருக்கான அவசியமே அதிகமிருப்பதாக தோன்றுகிறது.
ஏனெனில், உண்மை மட்டுமே அழகானது. ருசிக்கத்தக்கதும் கூட.

6/09/2011

வன்னியின் நாயைக் காட்டிலும் கீழானவர்கள் நாம்.



இந்த சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும் போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக்கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே.

-சிவரமணி.

எனக்கு வசப்பட்ட சினிமா மொழியின் மேல் நம்பிக்கைக் கொண்டு ஈழத்தமிழருக்காக என்னால் இயன்ற பணியாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு குறித்த ஒரு மணி தியான சினிமாவிற்கான திரைக்கதையாடலை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான காட்சி தரவுகளுக்காக முள்ளிவாய்க்கால் களப்பகுதியில் உயிர் தப்பி வந்தவரிடம் வெகு நீண்ட நேரம் கதைக்க நேர்ந்தது.

நம் தமிழனம் கண்ட, மாண்ட கொடுமைகள் எல்லாம் கற்பனைக்கு எட்டாதது. அவ்வாதையின் வலியை யாராலும் வெற்று வார்த்தைகளால் வடித்துவிட இயலாது.

கிளிநொச்சியிலிருந்து விரட்டப்பட்டு பல நாட்களாய் சில மாதங்களாய் உயிரைப் பிடித்துக் கொண்டு பசியாய் பட்டினியாய் முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்தனர், நம் மக்கள். கொடூரமான கொத்து குண்டுகளையும், எரிகனைகளையும், நாட்டம் பொம்களையும், ஒதுங்கி நிற்கும் வண்ணி சொந்தங்கள் மீது சரவெடியாய், கொட்டும் மழையாய் பொழிந்தான் காடையன். சூரத்தேங்காய் சிதறல்களாக வெடித்து சிதறினர் நமது மக்கள். சிதறிய சடலங்கள் புதைக்கப்படவில்லை. நான்கு நாட்களாய் சோறுமின்றி நீருமின்றி வதைத்தெடுத்த பசியின் தெறிப்பால், அம்மாவை அறைந்திருக்கிறாள் 8 வயது சிறுமி. பசியால் நொந்து சோர்ந்து களைத்து போன வயது போனவர்களை தூக்கியோ கூட்டியோ போக முடியாத நிலை. அவர்களுக்கு பேதி மாத்திரைகள் கொடுத்து கருனைக் கொலை செய்ய நேர்ந்ததாம். வன்னி சொந்தங்களோடு அவர்களின் வளர்ப்பு நாய்களும் கூட வரத் தவறவில்லை. நீருமின்றி சோறுமின்றி நெடும் பசி வெறியால் மயங்கினர் நம் மக்கள். எங்கெங்கும் வெடித்து சிதறிக்கிடந்த தசையிலும், இரத்தத்திலும் பசியாறியதாம் உடன் வந்த நாய்கள்.

வழியில் வெடித்து சிதறிய சடலம் ஒன்று கிடக்கிறது. அதை மண்ணிட்டு கூட யாரும் மூட வில்லை. அது ஒரு கிழவனின் பிணம். அதனருகே காவலாய் விழித்திருக்கிறது அவர் வளர்த்த நாய். பசியில் அலைந்த படி வழி போகும் வேற்று நாய்கள் அச்சடலத்திற்கு அருகே வந்துவிடாமல் விரட்டியிருக்கிறது, இந்நாய். அதன் உடல் சோரும் வரை சடலத்தைக் காத்து கிடந்ததாம். அனைவரும் சடலத்தை விட்டு அகன்றும் அகலாமல் வினோத முகபாவத்துடன் அடைக்காத்தப்படி நின்றதாம், வன்னி நாய்.

வன்னியின் நாய் செலுத்தும்/செயல்படுத்தும் மனித நேயத்தைக் கூட இந்திய தமிழர்களாகிய நாம் செலுத்த இயலுவதில்லை. தமிழர் என்ற இன உணர்வு இல்லாவிடிலும், பல லட்ச மனித உயிர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டதற்கு நம்மிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வெளிப்படுவதாக தெரியவில்லை. வன்னியின் நாயின் சிறு உணர்வு கூட நம்மிடம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை, வன்னி நாய்களின் மூலை வளர்ச்சி நம்மைக் காட்டிலும் முதிர்ச்சியுடன் இருக்கிறதோ என்னவோ?

வளர்ச்சியும் மாற்றமும் மூலையின் உள் இருந்து துவங்குகிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆளுமை, ஒருவனது மூளையை ஆதிக்கம் செய்வதாகவே இருக்கமுடியும். இந்திய தமிழர்களாய் நாம் அப்படிப்பட்ட ஆளுமையால் அடையாளமிழந்து சிக்கி திணறிக்கொண்டிருக்கிறோம். உலகின் மாபெரும் வியாபார சந்தையாக நாம் நாள்தோறும் நம்மையே விற்றுக் கொண்டிருக்கிறோம். நம்மை முடங்கள் ஆக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு, தாங்கி நடப்பதற்கு கட்டைகளையும் தரத் தயாராக இருக்கிறது, இந்திய அரசியலின் வீச்சு. தப்பித்தவறி நமது பீக்கு சிறு மதிப்பீடு இருக்குமேயானால், நாம் சூத்துகளின்றி பிறக்க வாய்ப்பிருக்கிறது. கண்ணாடியில் பிரதிபளிக்கும் நமது ரூபத்தை காறி துப்ப பயில்விக்கிறார்கள், அனைத்தையும் உலகமயமாக்கும் அரசியல் வணிகர்கள்.

"பிளாசி யுத்தத்தில் மன்னர் சிராஜ் உத்தௌலாவை ராபர்ட் கிளைவ் தோற்க்கடித்தது இந்தியா(!) அடிமைப்பட்ட வரலாற்றில் முக்கியத் திருப்பு முனை. வெற்றி கொண்ட ராபர்ட் கிளைவ் 144 சிப்பாய்களுடன் நகரத்தைக் கடந்து செல்கிறான். வெறும் 144 சிப்பாய்கள். நகர மக்கள் வீதிகளில், வீடுகளில், சந்திப்புகளில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். நடுக்கத்துடன் நகரத்த்தைக் கடந்து விட்ட கிளைவ், "இப்போதுதான் உயிர் வந்தது; கூடிய மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால் கூட நாங்கள் இல்லாமல் போயிருப்போம்" என்றான். முக்கிய வரலாற்றுப் புள்ளியில் மக்கள் செயல்படாமல் நின்றார்கள். முதல் கல்லெறிவதைச் செய்து வழி நடத்தக்கூட ஒருவரும் இல்லை. 'வரல்லாற்றில் வாழ்தல்' என்பது வரலாற்றில் கல்லெறிதல்தான்"
-பா.செயபிரகாசம் (தீராநதி-யூன்2011)

எமது கைகள் அரிக்கும் பொழுதுகளில் மட்டுமே நான் எழுதத் தொடங்குகிறேன். அவசியத்தை உணரும் போதே நான் செயல்பட துவங்குகிறேன். இப்பொழுதுகள் யாவும் கொடூரமிக்க அழகுடனும், அழகுமிக்க கொடூரத்துடனுமான எமது வாழ்வின் கொண்டாட்டங்கள். ஒரு ஜப்பானிய மீனிற்கு தனது முட்டைகளை ஜப்பானிய நதியில் இட்டு செல்வதே இயல்பாக இருக்க முடியும் என்கிறார் அகிரா குரோசவா. அதுபோலவே எமக்கும். எனது வாழ்வியல் பதிவுகள் யாவுமே 'எனது அடையாளத்தை' (என்பதின் மூலமாக எனது இனத்தின்/மனிதர்களின் அடையாளத்தை) பதிவு செய்யும் செயல்பாடாகவே இருக்கும். வரலாற்றில் வாழ்தல் என்பது வரலாற்றில் கல்லெறிதல் தான். வன்னியின் நாய் அளவிற்கு இல்லாவிடிலும், என்னால் ஆனவரை நான் கல்லெறிவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னருமை தோழர்களே, நீங்கள்?



6/03/2011

பழைய புத்தகக் கடையில்..

மனதில் தைத்த சில கவிதைகள்:

எடைக்குப் போடப் பட்ட எண்ணங்களின் குவியல், பழைய புத்தக கடைகள். 5 ரூபாயில் 100 ரூபாய் புத்தகம் கிடைக்கும். சமீககாலமாக பாடநூல்களே அதிகம் தென்படுகிறது. எனினும், கவிதை புத்தகங்களுக்கு பஞ்சமே இருக்காது. 5 புத்தகங்களை 25 ரூபாய்க்கு வாங்கினால், அதில் கண்டிப்பாக நாலே முக்கால் புத்தகங்களாவது படு மொக்கையாக இருக்கும். மீதமுள்ள மிச்சமீதியில் ஒன்றிரெண்டு கவிதைகள் மட்டுமே மனதை நெருடும். பொதுவாக மலத்தில் அரிசி பொறுக்கும் கதையாக இருந்தாலும், சமயத்தில் அரிசியில் கல் நீக்கும் அற்புதமும் அவ்வபோது நடக்கிறது.

இருந்தும், இவ்வித தேடலை தொடர்வதற்கான காரணங்கள்:

1. பொதுவாகவே, நான் கவிதைகளை காட்டிலும் உரைநடையையே பெரிதும் விரும்புகிறேன். நுட்பத்தையும் நுன்னியத்தையும் வெளிப்படுறதுக்காக முக்கி முக்கி புனைவா எழுதப்படற கவிதை தொகுப்புக்கு காசு செலவு பன்றதக் காட்டிலும், உண்மையா எழுதப்படற சாதாரண கட்டுரை புத்தகங்களும், கதைகளும் தான் என் இஷ்டம்.

2. உயிர்மை, காலச்சுவடு, தீரானதி, கணையாழி போன்ற நமது இலக்கிய இதழ்களில் வரும் பெரும்பாலான கவிதைகள் எனக்கு சுத்தமாக புரிவதில்லை. பிரபஞ்சதின் நுனியில் இருந்தபடி, ஆளுமை சேர்த்து, பிரக்ஞை சுழித்து, இருண்மை தவிர்த்து... கொய்யால பொறுமையா நாலு அஞ்சு தடவ படிச்சுப்பாத்தாலும் ஒரு ______ம் புரியரதில்லை.

3. அட்ட பக்கத்தில் ஒரு புரியாத அழகிய நவீன ஓவியம். உள்ளார, ஒரு பக்கத்துக்கு (பக்கத்துக்கு கீழ சின்னதா ஒரு வரிக்கு ஒரு வார்த்தயா) 4 வார்த்தை. மொத்தம் 70 பக்கம். கவித தொகுப்புல மொத்தமே 200 - 300 வார்த்த தான் இருக்கும். விலை : 95 ரூபாய். (நம்மல பாத்தா ரொம்ப மக்கு மாதிரி தெரியுதோ?!)

4. பழைய புத்தக கடையில் நான் வாங்குபவை அனைத்தும், அங்கீகாரமுள்ள நல்ல கவிஞர்களின் புத்தகங்கள் கிடையாது. முற்றிலுமாகவே ஆர்வக்கோளாற்றில் அவதரித்த மழலைகள் தான். மழலைக்குரிதான வசீகரமும் முட்டாள்தனமும் மேதமைகளிடம் கிடைக்காது. மேலும் மழலைகளின் விலை வெறும் 5 ரூபாயில்.

என் நெஞ்சில் தைத்த சில வரிகளை எனது நண்பர்களாகிய உங்களுடன் பதிவிடுவதும் வாழ்த்துரைதான்:



எங்கள் சகோதரிகள்

கற்ப்பழிக்கப் படுகின்றார்கள்

எங்கள் சகோதரர்களின்

தலைகள் வெட்டப்படுகின்றன

இனப்படுகொலைகள்

தொடர்கின்றன.

தலையிடுங்கள் எனக் கேட்டால்

அவர்களது உள்நாட்டு பிரச்சனையில்

நாம் தலையிட்டால்

வல்லரசுகள்

சும்மா இருக்காது என்கிறார்கள்

அது சரி

அப்படியானால்

கடோற்கஜ உருவில்

இங்கே நாம்

ஏக இந்தியாவாக இருப்பது

பிறகென்ன

கோழிமுட்டையில்

புல் புடுங்கவா?



*****



வெள்ளையன் வந்தான்

அடக்கினான்

அடங்கினோம்

ஆண்டான்.



பிரஞ்சுகாரன் வந்தான்

அடக்கினான்

அடங்கினோம்

ஆண்டான்.



முகம்மதியன் வந்தான்

அடக்கினான்

அடங்கினோம்

ஆண்டான்.



இது இந்த தேசத்தின்

வரலாறு.



இன்னும் எந்த

நாய் கழுதை வந்திருந்தாலும்

அடக்கியிறுக்கும்

அடங்கியிருப்போம்

ஆண்டியிருக்கும்



இந்த லட்சணத்தில்

இந்த தேசம்

எப்போதும்

கொதித்து கொண்டிருப்பத்உ போலவும்

அந்தக் கொதிப்பை

அடக்காவிட்டால்

சர்வநாசம்

வந்து விடும் போலவும்

அகிம்சை அகிம்சை

என்கிறீர்களே

இந்த கதாகாலட்சேபம் எதற்கு?



சமூக கோபம் என்பதே

சவமாகி போன இந்த மண்ணில்

சவமானது போக,

மிச்சம் மீதியிருக்கும்

சவலைகளையும்

சவடால்களையும் கூட

சவமாக்கிடும் நோக்கமா?

போதும் நிறுத்துங்கள்.

. இறைவன் -

******

குரங்குக்கும் கோவில் கண்டோம் - தேங்காய்

குடிமிக்கும் தெய்வம் கண்டோம் - சொறி

சிறங்கு பயலையும் சாமி என்றால்

சீவதம் உய்வதெந்நாள்?

மொட்டையே அடித்தடித்து மண்டையில் மயிரு போச்சு

மொட்டையில் வெயிலடித்து மூளையும் கருகி போச்சு

பட்டியில் ஆடு போச்சு

பணங்காசு தானும் போச்சு

வட்டிக்கு பணங் கொடுத்தோன்

வாசலில் நின்ற போது

கட்டிய தாலியிலே

கயிறு தான் மிச்சமாச்சு.



கெட்டு நாம் போன பின்னும்

கீழென ஆன பின்னும்

இட்டிடும் கல்லை தொட்டு

இன்னுமா வணங்க வேணும்?

-துளசிதாசன்.



*****



காணி நிலம்

முப்பாட்டனிலிருந்து அப்பன் காலம் வரை

மும்மாரி பெய்த மழையில்

முப்போகம் தந்து களைத்து போன

காணி நிலம்

எங்கள் வாழ்வில்

விற்றும் அடகு வைத்தும்

அரபு நாடுகளுக்கு பயணச் சீட்டாகவும்

நகரத்து பனியன் கம்பெனிக்கு

புதிய வழிகாட்டியாகவும்

அக்கா தங்கைக்கு சீர் வரிசையாகவும்

அவதாரம் பூசி கரைந்து போகிறது

காணி நிலம்.

. லட்சுமணன்.

*****



நாளைய போர்களத்திற்கு

போர்களத்தில் உங்களால்

பறிக்கப்படும் எங்கள் உயிர்களை

நாங்கள் புதைத்திருக்கிறோம்

அல்லது எரியூட்டுகிறோம்.

அவர்கள் ஆன்மா

எங்களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நீண்ட நேரம் நாங்கள்

உறங்கும் கணத்தில்

எங்கள் பிடறியில் பலமாக தட்டிகிறது.

நாங்கள் சிந்திப்பதை நிறுத்தும் கணத்தில்

எங்களுக்கு நினைவூட்டுகிறது,

எங்கள் சுதந்திரத்தை.

அவர்களின் அர்த்தமற்ற

உயிர்பறிப்புகள்...

எங்களை இன்னும் வீரமாக்குகிறது

நாளைய போர்க்களத்திற்கு.

.லட்சுமணன்.

*****

இப்படியாய் யாவரும்



முதல் சந்திப்பில்

வார்த்தையின் ஊடே.

ஊர் வரை நுழைந்து

சாதியின் பெயரை

நாசூக்காக கேட்டறிவதும்.

நடிகையின் புதிய அந்தரங்கத்தை

தேநீர் விலையில் பறிமாறிக் கொள்வதும்

அடங்க மறுத்திடும்

காமக் கடும்பசிக்கு

பார்வையின் ஊடே

கூடு பாய்ந்து பசியாறுவதும்

காதலின் புதிய கணக்கை

கடக்க நேரிடுபவர்களின்

மீது திணிப்பதும்

பொதுவான ஒரு வியாதி

இருக்கத்தான் செய்கிறது

எல்லாரிடத்திலும்.

-. லட்சுமணன்.



(வாராவாரம் தொடரும்)