6/29/2011

அவன் - இவன் - நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன்.




(பழைய புத்தக கடையில்..)



"லோ பரி ல வண லாரியோ

மரிலு பாயாரோ - பாரி லாரியா நியா
லாபரியா நியா."


இப்பொருளற்ற எழுத்துக்கள் ஓர் நாகரிகக் கோமாளியின் நகை மொழிகள்.

புத்தகம் 1: கலைவாணர் சொற்பொழிவுகள்
தொகுப்பாசிரியர்: வே. குமரவேல்
பக்கங்கள்: 263

புத்தகம் 2: கலைவாணர்
தொகுப்பாசிரியர்: திரு. கழஞ்சூர் செல்வராஜ்
பக்கங்கள்: 823 (மற்ற பக்கங்கள் கிடைக்கவில்லை)


பழய புத்தக கடைகளில் இதுபோன்ற புத்தகங்களை இட்டு செல்பவர்கள் உண்மையிலேயே தியாகிகள் தான். படிக்க, படிக்க பல உண்மைகள் ஆழமாய் நெருட - உடனே பல கட்டுரைகளை எழுதத் துடிப்பு. காலவரட்சியால் இந்த ஒற்றை கட்டுரையாவது உடனே இடும் நிர்பந்த கடப்பாடு.

சார்லெஸ் சாப்ளினின் வாழ்வியல் எனக்கு தந்த ஆச்சர்யங்களைக் காட்டிலும் என்.எஸ்.கேவினுடையது மிக அலாதியாக இருக்கிறது. அதற்கான காரணம் அவர் நம்மவர் (தமிழர்) என்பதனால் இல்லை. உன்னதமான கலைஞனுக்கான அத்துனை அம்சங்களையும் நன்குணர்ந்து வாழ்ந்திருக்கிறார் மனிதர். நாடகம், திரை, கதைப்பாட்டு, வில்லுப்பாட்டு அனைத்திலும் மூட நோய் தீர்க்கும் ஈரோட்டு கசப்பு மருந்தை - நகைச்சுவையில் கலந்து எல்லோரையும் விழுங்க வைத்திருக்கிறார் என்.எஸ்.கே. சும்மா ஒரு சின்னஞ்சிறு சாம்பிளுக்காக அவரது சிந்தனைகள் சில:

"நாமுகன் நாவில் நாமகள் - உறைவது நிசமானால் மலசலம் கழிப்பது எங்கே? எங்கே?
கங்கையிலே குளித்தால் கர்மம் தொலையுமென்றால் - அதில் கத்தும் தவளைக்கும் மீனுக்கும் பேறு எங்கே?" (படம்: நீலகண்டர்)


"பரமசிவன் கி - பார்வதி, கங்கா தோ பத்னி ஹே.. எனக்கு ஒன்னும் நஹிஹே!! கியா கர்ண பஹ்வான்???" (படம்: பவளக்கொடி)

ஒளிவு மறைவின்றி பார்ப்பனியத்தை 'உத்தமபுத்திரனில்'..
போலிச் சாமியார் கபடங்களை 'இராமலிங்க சாமிகளில்'..
"ஏய் நூத்திப்பதினொண்ணு.. சட்டி தூக்கியும் - உன் புத்தி போகலியே.." என்றும்..
நந்தனை கிந்தனாக்கி, ஹரிசந்திரனை சந்திரஹரியாக்கி,
"கட்டுக் கதைகளை விட்டுத்தள்ளடா.. இல்ல உன் குட்டு வெளிப்படுமே" என்றும்..
சவுண்டிகளின் புராணிகப் புரட்டுகளை சவுக்கடி கொடுத்து விரட்டி, திரைப்பட தணிக்கைக்கும் தண்ணி காட்டிய - அவர் தகைமை ஓர் தனித்திறமை.

"சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க.. சொல்லிச்
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க..
குடிக்கத் தண்ணியில்லாம பெருங்கூட்டம் தவிக்குது - சிறு
கும்பல் மட்டும் ஆரஞ்சு பழ ஜூஸு குடிக்குது.." (படம்: மணமகள்)

"தாலிக்கயிறு தனியாயிருக்கும் - தங்கமிருக்காது..
தண்ணிக் குடிக்க தகரக் கொவள சொம்பும் இருக்காது..
பாலு வாங்க குழந்த பசிக்கு பணமுமிருக்காது..
பாழுங்கல்லை குடிப்பது மட்டும் நாளும் தப்பாது.

பாலு வாங்க பணமில்லேன்னா.. டீய குடிச்சுக்கோ..
டீயும் கெடுதல்லுன்னு தெரிஞ்சா மோர குடிச்சுக்கோ..
மோரும் நமக்கு கெடக்கலே.. நீராகாரம் இருக்கவே இருக்கு - அத
குடிச்சு பழகனும்."

"மறைவரோடு பள்ளுப் பறையரையேற்றி ஜாதி மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே!!"
என்று கிந்தன் சரித்திரதில் ரயிலை புகழ்கிறார், நம் சீர்திருத்த கோமாளி.

"இயல்பான உண்மையை அழகுப்படுத்திக் காட்டுவதே கலை. ஔவை கூழுக்கு பாடினாள்; பாரதி ஏழ்மையில் கவிதை தந்தான்; 95% தரித்திரத்திலேயே தான் கலை பிறக்கிறது" என்று தரித்தரத்துக்கு வக்காளத்து வாங்கியவர் என்.எஸ்.கே. வரும் பணத்தையெல்லாம் அள்ளிக் கொடுத்து வெறும் கையினாய், தரித்திரத்திலேயே பிறந்து தரித்திரத்திலேயே மறைந்த கலைஞன். மெட்ராஸ் - தியாகராஜா நகர் - வெங்கட்ராமய்யர் தெரு - 6ஆம் நம்பர் இல்லம் : உதவி நாடியவருக்கு ஒரு எளிய ஷேத்திரம்.

தனக்கென வாழ்ந்து வரும் மனிதர்களின் மத்தியில் வாழ்க்கை எதற்கு? என்று கேள்வி கேட்டுக் கொண்டே வாழ்ந்து காட்டிய கோமாளி.
மக்களுக்காக வாடிய இம் மாசறு கிறுக்கனை, 'கொடுத்து கொடுத்து ஏமாளியானவர்', 'பிழைக்க தெரியாதவர்', 'வாழ தெரியாதவர்' என கேலி செய்தவர் பலருண்டு.
அவர் ஒன்றும் வாழத் தெரியாதவர் அல்ல என்றே தோன்றுகிறது.. அவர் தான் வாழத் தெரிந்தவர்.
இன்றும் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கலையுலகின் கேவங்கள்:


இன்றைய நிலையில் தமிழ்த் திரைத் துறை எலும்பும் தோலுமாய் வீம்பி வீங்கிய வயிற்றுடன் உயிரைக் கண்ணில் வைத்திருக்கும் சீக்கு பிடித்த எதியோப்பிய குழந்தைப் போல மூச்சித் திணறிக்கொண்டிருக்கிறது. கலைத் திறன் இல்லா கழிசடை வாரிசை நாயகனாக்கி முதலீடு செய்து, படமும் எடுத்து, back up குடுத்து, தளபதியே! எதிர்காலமே! தலைவா! புரட்சியே! என பிளக்ஸுகள் நிறுத்தி, மன்றங்கள் எழுப்பி பன்றியை யானையாய் மார்கெட் பன்னும் குறளி வித்தையால் குளைந்திருக்கிறது கோலிவுட்.

சூத்திரகயிற்று விசையில், சுழன்றாடும் காகித பொம்மைக்கு ஆயிரம் பொய் முலாம் பூசி "அவனையும் இவனை"யும் திரைப்படுத்தி மக்களின் காசை உருவ மண்டையில் மயிற் புடுங்குகிறார்கள்.

இத்தகைய கலை ஊழலை 1950களிலேயே என்.எஸ்.கே. வெளிச்சம் போட்டு வீதிக்கு கொண்டுவந்துள்ளார். அன்றைய தமிழ் திரைப்படங்கள் பல பட்டிக்காட்டு பெண்ணைப்போல பதுங்கி டப்பாவுக்குள் ஒளிய காரணமென்ன? என்று கேட்ட கேள்விக்கு பதிலும் தருகின்றார்:

"கலையுலகில் ஒரு திணுசான இன்ஃப்ளுயன்ஸா பரவி விட்டது. யாருக்கும் எதையும் செய்யலாம் என்ற அசட்டு துணிவு வந்துவிட்டது. புது சிந்தனையே காணோம். எங்கெங்கு நோக்கினும் சிபாரிசு பேய் தான் தலை விரித்து ஆடுகிறது. அவருக்கு இவர் வேண்டியவர்.. இவருக்கு அவர் வேண்டியவர்.. என்ற முறையில் தான் அநேகர் அநேக படங்களில் அலுவல் புரிய நேரிடுகிறது. சிபாரிசு மூலமாக முன்னுக்கு வர நினைப்பவர்கள் அவசரக்காரர்கள். இதே அவசர புத்தி, அவர்களின் படைப்புகளிலும் தலைக்காட்டி கடைசியில் கலையையே கெடுத்து விடுகிறது."

"நான் மட்டும் இயக்குநர்கள் கைகளில் மட்டும் அகப்பட்டுக் கொண்டிருந்தால் என்னை இரக்கமில்லாமலேயே பாதாளத்தில் அமுக்கியிருப்பார்கள்."

"தற்பொழுது சில படங்களில் வரும் வில்லன்களைப் பார்த்தால் கூட எனக்கு கோபம் வருவதில்லை; காமெடியன்களைப் பார்த்தால் அவ்வுளவு கோபம் வருகிறது."

"கலை கலைக்காகவே என்கிறார்கள். இது உணவு உணவுக்காகவே என்பது போல் இருக்கிறது. கலை வாழ்க்கைக்காகத் தான்."

இவைகள் கலை பற்றி கலைவாணரின் நிலை மட்டுமல்ல.. உலக கலை கர்த்தாக்களின் நிலைப்பாடுகளும் கூட.

தமிழ் நாட்டுக்கு சேவை செய்த நாகர்கோவில் சுடலையாண்டி கிருஷ்ணன் காலி செய்த இடத்தை என்றும் இன்னொருவர் ஈடு செய்ய முடியாது - அறிஞர் அண்ணா.









7 comments:

Prabu Krishna said...

அருமை பிரபு. எனக்கு ரொம்ப பிடித்தவர். ஆனால் காலத்தின் கோலம் இவரைக்கூட சிறையில் தள்ளியது, கடைசி காலத்தில் மிக ஏழ்மையாக வாழ்ந்தார். முடிந்தால் இவரது சில வீடியோக்களை இங்கு தர முடியுமா? நான் மிகக் குறைவாக பார்த்து இருக்கிறேன்.

Remove Word Verification For Comments.

நாடோடி said...

என்.எஸ்.கே பற்றி நிறைய தகவல்களையும், இன்றைய கலையுலகின் அவலங்களையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்

நாடோடி said...

நண்பரே அந்த "Word Verification" யை தூக்கி விடுங்கள்.. அப்போது தான் எளிதாக பின்னூட்டம் இட முடியும்..

பூங்குழலி said...

நல்ல பதிவு .வாழ்த்துகள்

http://kalaivanar.com/

இதில் அவரை பற்றிய பல அறிய குறிப்புகள் இருக்கின்றன .அவரின் படைப்புகள் பலவும் இன்னமும் ஆவணப்படுத்தப்படவில்லை .இன்றைய தொலைக்காட்சிகளும் நகைச்சுவையிலும் கூட அவரின் படங்களை காட்டத் தயங்குகின்றன .

அருண் பிரபு said...

அனைவருக்கும் நன்றி... :) :)

@ நாடோடி: எந்த word verification?? நான் ப்ளாகிங்க்கு ரொம்ப புதுசு.. எனக்கு இதப் பத்தி ஒன்னும் அவ்வுளவு சீக்கரமா புரிய மாட்டேங்குது.. நீங்க தான் எனக்கு உதவனும் நாடோடி..

ராம்ஜி_யாஹூ said...

nice post

செல்வா said...

N.S.கிருஷ்ணன் பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் இந்த அளவிற்கு அதிகம் தெரியாது. சில படங்களில் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துள்ளேன். உண்மையில் பெரிய மனிதர்தான் :))