6/09/2011

வன்னியின் நாயைக் காட்டிலும் கீழானவர்கள் நாம்.



இந்த சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும் போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக்கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே.

-சிவரமணி.

எனக்கு வசப்பட்ட சினிமா மொழியின் மேல் நம்பிக்கைக் கொண்டு ஈழத்தமிழருக்காக என்னால் இயன்ற பணியாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு குறித்த ஒரு மணி தியான சினிமாவிற்கான திரைக்கதையாடலை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான காட்சி தரவுகளுக்காக முள்ளிவாய்க்கால் களப்பகுதியில் உயிர் தப்பி வந்தவரிடம் வெகு நீண்ட நேரம் கதைக்க நேர்ந்தது.

நம் தமிழனம் கண்ட, மாண்ட கொடுமைகள் எல்லாம் கற்பனைக்கு எட்டாதது. அவ்வாதையின் வலியை யாராலும் வெற்று வார்த்தைகளால் வடித்துவிட இயலாது.

கிளிநொச்சியிலிருந்து விரட்டப்பட்டு பல நாட்களாய் சில மாதங்களாய் உயிரைப் பிடித்துக் கொண்டு பசியாய் பட்டினியாய் முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்தனர், நம் மக்கள். கொடூரமான கொத்து குண்டுகளையும், எரிகனைகளையும், நாட்டம் பொம்களையும், ஒதுங்கி நிற்கும் வண்ணி சொந்தங்கள் மீது சரவெடியாய், கொட்டும் மழையாய் பொழிந்தான் காடையன். சூரத்தேங்காய் சிதறல்களாக வெடித்து சிதறினர் நமது மக்கள். சிதறிய சடலங்கள் புதைக்கப்படவில்லை. நான்கு நாட்களாய் சோறுமின்றி நீருமின்றி வதைத்தெடுத்த பசியின் தெறிப்பால், அம்மாவை அறைந்திருக்கிறாள் 8 வயது சிறுமி. பசியால் நொந்து சோர்ந்து களைத்து போன வயது போனவர்களை தூக்கியோ கூட்டியோ போக முடியாத நிலை. அவர்களுக்கு பேதி மாத்திரைகள் கொடுத்து கருனைக் கொலை செய்ய நேர்ந்ததாம். வன்னி சொந்தங்களோடு அவர்களின் வளர்ப்பு நாய்களும் கூட வரத் தவறவில்லை. நீருமின்றி சோறுமின்றி நெடும் பசி வெறியால் மயங்கினர் நம் மக்கள். எங்கெங்கும் வெடித்து சிதறிக்கிடந்த தசையிலும், இரத்தத்திலும் பசியாறியதாம் உடன் வந்த நாய்கள்.

வழியில் வெடித்து சிதறிய சடலம் ஒன்று கிடக்கிறது. அதை மண்ணிட்டு கூட யாரும் மூட வில்லை. அது ஒரு கிழவனின் பிணம். அதனருகே காவலாய் விழித்திருக்கிறது அவர் வளர்த்த நாய். பசியில் அலைந்த படி வழி போகும் வேற்று நாய்கள் அச்சடலத்திற்கு அருகே வந்துவிடாமல் விரட்டியிருக்கிறது, இந்நாய். அதன் உடல் சோரும் வரை சடலத்தைக் காத்து கிடந்ததாம். அனைவரும் சடலத்தை விட்டு அகன்றும் அகலாமல் வினோத முகபாவத்துடன் அடைக்காத்தப்படி நின்றதாம், வன்னி நாய்.

வன்னியின் நாய் செலுத்தும்/செயல்படுத்தும் மனித நேயத்தைக் கூட இந்திய தமிழர்களாகிய நாம் செலுத்த இயலுவதில்லை. தமிழர் என்ற இன உணர்வு இல்லாவிடிலும், பல லட்ச மனித உயிர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டதற்கு நம்மிடமிருந்து எவ்வித எதிர்வினையும் வெளிப்படுவதாக தெரியவில்லை. வன்னியின் நாயின் சிறு உணர்வு கூட நம்மிடம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை, வன்னி நாய்களின் மூலை வளர்ச்சி நம்மைக் காட்டிலும் முதிர்ச்சியுடன் இருக்கிறதோ என்னவோ?

வளர்ச்சியும் மாற்றமும் மூலையின் உள் இருந்து துவங்குகிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆளுமை, ஒருவனது மூளையை ஆதிக்கம் செய்வதாகவே இருக்கமுடியும். இந்திய தமிழர்களாய் நாம் அப்படிப்பட்ட ஆளுமையால் அடையாளமிழந்து சிக்கி திணறிக்கொண்டிருக்கிறோம். உலகின் மாபெரும் வியாபார சந்தையாக நாம் நாள்தோறும் நம்மையே விற்றுக் கொண்டிருக்கிறோம். நம்மை முடங்கள் ஆக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு, தாங்கி நடப்பதற்கு கட்டைகளையும் தரத் தயாராக இருக்கிறது, இந்திய அரசியலின் வீச்சு. தப்பித்தவறி நமது பீக்கு சிறு மதிப்பீடு இருக்குமேயானால், நாம் சூத்துகளின்றி பிறக்க வாய்ப்பிருக்கிறது. கண்ணாடியில் பிரதிபளிக்கும் நமது ரூபத்தை காறி துப்ப பயில்விக்கிறார்கள், அனைத்தையும் உலகமயமாக்கும் அரசியல் வணிகர்கள்.

"பிளாசி யுத்தத்தில் மன்னர் சிராஜ் உத்தௌலாவை ராபர்ட் கிளைவ் தோற்க்கடித்தது இந்தியா(!) அடிமைப்பட்ட வரலாற்றில் முக்கியத் திருப்பு முனை. வெற்றி கொண்ட ராபர்ட் கிளைவ் 144 சிப்பாய்களுடன் நகரத்தைக் கடந்து செல்கிறான். வெறும் 144 சிப்பாய்கள். நகர மக்கள் வீதிகளில், வீடுகளில், சந்திப்புகளில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். நடுக்கத்துடன் நகரத்த்தைக் கடந்து விட்ட கிளைவ், "இப்போதுதான் உயிர் வந்தது; கூடிய மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால் கூட நாங்கள் இல்லாமல் போயிருப்போம்" என்றான். முக்கிய வரலாற்றுப் புள்ளியில் மக்கள் செயல்படாமல் நின்றார்கள். முதல் கல்லெறிவதைச் செய்து வழி நடத்தக்கூட ஒருவரும் இல்லை. 'வரல்லாற்றில் வாழ்தல்' என்பது வரலாற்றில் கல்லெறிதல்தான்"
-பா.செயபிரகாசம் (தீராநதி-யூன்2011)

எமது கைகள் அரிக்கும் பொழுதுகளில் மட்டுமே நான் எழுதத் தொடங்குகிறேன். அவசியத்தை உணரும் போதே நான் செயல்பட துவங்குகிறேன். இப்பொழுதுகள் யாவும் கொடூரமிக்க அழகுடனும், அழகுமிக்க கொடூரத்துடனுமான எமது வாழ்வின் கொண்டாட்டங்கள். ஒரு ஜப்பானிய மீனிற்கு தனது முட்டைகளை ஜப்பானிய நதியில் இட்டு செல்வதே இயல்பாக இருக்க முடியும் என்கிறார் அகிரா குரோசவா. அதுபோலவே எமக்கும். எனது வாழ்வியல் பதிவுகள் யாவுமே 'எனது அடையாளத்தை' (என்பதின் மூலமாக எனது இனத்தின்/மனிதர்களின் அடையாளத்தை) பதிவு செய்யும் செயல்பாடாகவே இருக்கும். வரலாற்றில் வாழ்தல் என்பது வரலாற்றில் கல்லெறிதல் தான். வன்னியின் நாய் அளவிற்கு இல்லாவிடிலும், என்னால் ஆனவரை நான் கல்லெறிவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னருமை தோழர்களே, நீங்கள்?



No comments: