6/16/2011

பழைய புத்தகக் கடையில் -2 : (றோம், றோம், றோம்)

புத்தகத்தின் பெயர்: ஏழாவது அறிவு (கட்டுரைகள்)


எழுத்தாளர்: வெ. இறையன்பு

உலகின் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் அநுபவத்தில் இக்கால மனிதர்களே மிகவும் வினோதமான ஜீவராசியாக இருக்க முடியும். இவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளும், இடர்பாடுகளும், குழப்பங்களும் வேறு எந்த உயிரினங்களுக்கும் இருந்ததில்லை. கம்யூட்டரின் முன் ஃபேஸ் புக்கின் வாயிலாக வாழ்கிறோம். நமக்கு மட்டுமே இவ்வுளவு குழப்பங்கள். நாம் மட்டுமே ஈஷா யோகாவில் சேர்கிறோம். நீங்க யாராவது இந்த யோகா வகுப்புக்கெல்லாம் போயிருக்கீங்களா?! ஈஷா மாதிரியான எல்லா வணிகர்களின் சாராம்சமும் ஒன்று மட்டுமே: வாழ்வது எப்படி?

உலகிலேயே சிரிப்பது, உண்பது, தூங்குவது, சும்மா இருப்பது, பார்ப்பது, மூச்சு விடுவது - இதுக்கெல்லாம் பணம் கொடுத்து பயிற்சிக்கு போற முட்டாள்கள் நாமாகவே இருக்க முடியும். வேறு எந்த உயிரினமும் சும்மா இருப்பது எப்படி? என்பதற்காக 6375/- ரூபாய் செலவு செய்வதில்லை.

அவ்வுளவு குழப்பம். வாழ்க்கையை வாழ தெரியாதவர்களாக நாம் நம்மை மாற்றிக் கொண்டுள்ளோம். கேள்வி எழுப்புதல் என்பதே நமது இருத்தலின் நிலைபாடென்பதை நாம் மறக்க விரும்புகிறோம். உணர்தல் நம்மிடம் இல்லாமல் போவதற்கான அத்தனை முயற்சியிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். கிட்டதட்ட, நாம் எதையுமே உணருவதில்லை. இயற்கையான பொழுதுகள் நம்மிடையே அழிந்த படியே வருகிறது. இயற்கையாக கேள்விகள் ஊற்றெடுப்பதே இல்லை என்பதால், நாம் குழப்பங்களுக்குள் வாழ்கிறோம்/சாகிறோம். சுயத்தை பற்றி எவ்வித கவலையும் நமக்கு இருப்பதாக தெரியவில்லை. நம்மை சுய நலம் சார்ந்தவர்களாக காட்டிக்கொண்டால் நம்மை சமூகம் அசிங்கமாகப் பார்க்கும் நிலை இருப்பதாக நினைத்து குழப்பிக்கொள்கிறோம்.

குழப்பங்கள் அதீதமாகும் போது, நாம் ஏதுமற்றவர்களாய் மாற முற்பட்டு, வேறொருவர் சொல்லை முழுவதுமாக பின்பற்ற தொடங்குகிறோம். அதை கேள்விக் கேட்பதும் இல்லை. சிறு வயதிலிருந்தே நாம் அதற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்கிறோம். கும்பிடுன்னா கும்பிடுறோம். வணக்கம்வைன்னா வணக்கம் வைக்கிறோம். சிரின்னா சிரிக்குறோம். தூங்குன்னா தூங்குறோம். எழுந்திரின்னா எழுந்திரிக்கிறோம். படின்னா படிக்கிறோம். றோம். றோம். றோம். றோம். றோம். றோம்.றோம். றோம். றோம். றோம். றோம். றோம். சுயமும் போச்சு; மரியாதையும் போச்சு.

இறையன்புவின் இப்புத்தகம் ஒன்னும் அற்புதமான புத்தகம் இல்லை. நீட்சே, ஃப்ராய்ட், லக்கான், யூங், லா ஓட்சு போன்றோரின் எண்ணங்கள் அளவிற்கு தெளிவானதாக இப்புத்தகத்தில் எதுவுமே இல்லை. இருப்பினும், இறையன்பு அவர்களின் பகிர்தல், அவர் படித்த விசயங்களின் பதிவு, சுவாரஸ்யமான வாழ்வியல் கேள்விகள் உருவாகும் கதைகள் என இப்புத்தகத்தில் பல விறு விறுப்பான எண்ணங்கள் இருக்கவே செய்கிறது. உதாரணமாய் "பிராத்தனை" எனும் தலைப்பில் அவர் குறிப்பிடும் கட்டுரை, உங்களுக்காக:

பிராத்தனை - இறையன்பு

சடங்குகள், பூஜைகள், வழிபாடுகள் இவற்றையும் மீறியது பக்தி. சடங்குகள் பக்தி செய்கிறோம் என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி நம்மை மகிழ்ச்சியட்ஐயச் செய்கின்றன. புனித தளத்திலே நீராடினால் நம் பாவங்களையெல்லாம் கரைந்துவிடும் என நினைத்து, தெரிந்தே பாவங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

கபீர் தன்னுடைய தோஹேவில் "புனிதத் தலங்களில் நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்று சொன்னால், அங்கு ஏற்கனவே வசித்த்துக் கொண்டிருக்கும் மீன்களுக்கும், தவளைகளுக்கும் இன்னேரம் மோட்சம் கிடைத்திருக்க வேண்டுமே!" என்று கிண்டலாக கிறிப்பிடுவார்.

Scape goat -பலிகடா என்கிற வார்த்தை எப்படி வழக்கில் வந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமான செய்தி. யூதர்களுடைய குரு ஒரு விசேச நாளில் யூதர்களுடைய பாவங்களையெல்லாம் ஒரு ஆட்டின் நெற்றிக்கு மாற்றுவார் - அந்த ஆடு பாவம் - மனிதர்கள் செய்த எல்லா குற்றங்களையும் சுமந்துகொள்ள்உம் - பிறகு ஆட்டைப் பலி கொடுத்து அந்த ஆட்டின் எல்லா பாவங்களையும் போக்குவார்கள் - அந்த ஆட்டைப் பலி கொடுத்தால், தங்கள் எல்லோருடைய பாவங்களும் நீங்கி விடுவதாக ஐதீகம்.

அதைப்போலவே, Whipping Boy என்கிற பதமும் பயன்படுகிறது. இளவரசனைப் படிக்க அனுப்பும் போது, அவனுடன் இன்னோரு மாணவனும் அனுப்பப்படுவான். இளவரசன் தவறு செய்தால் அவனை அடிக்க முடியாது. ஆனால் ஆசிரியர் கண்டிக்காமல் இருக்கவும் முடியாது. கண்டிக்காவிட்டால் ஆசிரியர் ஆசிரியர் திருப்தியடைய முடியாது. ஆசிரியருக்கும் திருப்தி ஏற்பட வேண்டும்; இளவரசனும் அடிபடக் கூடாது. எனவே, ஆசிரியர் இளவரசன் மீது கோபம் வரும் போதெல்லாம் உடன் இருக்கும் மாணவனை அடிப்பார் - அவன் தான் 'சவுக்கடி பையன்'.

நமது சடங்குள் மாயத்தோற்றம் ஏற்படுத்தி, நமது முனேற்றத்தைத் தடை செய்கின்றன. ஆன்மிக வாழ்வில் மட்டுமல்ல சாதாரண - தினப்படி வாழ்விலும் போலியான விசயங்கள் நம்மை எளிதில் கவர்ந்துவிடுகின்றன. நாம் உண்மையான செய்திகளை விட்டு விட்டுப் போலியானவற்றின் கவர்ச்சியில் திளைத்து விடுகிறோம். யார் போலியான அழகில் சிக்காமல் முன்னேறுகிறார்களோ, அவர்கள் உண்மையான அழகைக் கண்டுபிடிக்கிறார்கள். அது எவ்வுளவு தத்ரூபமானது, ஆழமானது, ஆனந்தமானது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

சினிமாக்களில் கூட, போலி சினிமாக்களைத் தாண்டினால், நல்ல சினிமாக்கள் கிடைக்கின்றன. இலக்கியங்களில் போலி இலக்கியங்களைத் தாண்டினால், நல்ல இலக்கியம் - மேன்மையான இலக்கியம் அகப்படுகிறது. உடல் அழகைக் கடந்து உட்புகுந்தால், உண்மையான உள்மையம் தெரிகிறது. அதைப் போலவே, சடங்குகளைத் தாண்டினால், தியானம் நிகழ்கிறது.

ஓர் இளைஞன் மிதிவண்டியில் மார்க்கெட்டுக்குச் சென்றான். அங்கே மிதிவண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கச் செல்கிறான். அங்கே மிதிவண்டியைத் தான் பூட்டாமல் விட்டது நினைவுக்கு வருகின்றது.மிதிவண்டியஇ நிறுத்திய இடத்திற்கு ஓடி வந்து பார்க்கிறான். மிதிவண்டி நிறுத்திய இடத்தில் அப்படியே இருக்கிறது. பக்கத்திலேயே ஒரு கோயில். ஓடி ஆண்டவனுக்கு மனமார நன்றி சொல்லி விட்டு வருகிறான் - சைக்கிளைக் காணவில்லை.

3 comments:

Prabu Krishna said...

நிச்சயமாக படிக்கிறேன் நண்பா. இந்த ஒரு பதிவே ஆர்வத்தைத் தூண்டுகிறது.

Comment க்கு word Verification எடுத்து விடவும்.

அருண் பிரபு said...

ஹ்ம்ம்ம்... நன்றி... :)

இராஜராஜேஸ்வரி said...

நமது சடங்குள் மாயத்தோற்றம் ஏற்படுத்தி, நமது முனேற்றத்தைத் தடை செய்கின்றன. ஆன்மிக வாழ்வில் மட்டுமல்ல சாதாரண - தினப்படி வாழ்விலும் போலியான விசயங்கள் நம்மை எளிதில் கவர்ந்துவிடுகின்றன

அருமையான பயனுள்ல சிந்தனயைத்தூண்டும் பகிர்வு. பாராட்டுக்கள்..