6/01/2011

சூன்யம் சுருங்குகிறது; மேகத்தில் விடிவெள்ளி சிரிக்கிறது


ஈழத்து கவிஞர் திரு. எழில் பற்றிய குறிப்புகள்:


என்றும், என் பயணம் - என் முகவரி தேடியே.

படத்திலிருப்பர் ஈழத்தின் கத்தோலிக்க திருச்சபையின் இளந்துறவி எழில்.
லயோலாவில் நான் காட்சியியல் துறை; அவர் பொருளியல் துறை. அவரது இலக்கிய ஆளுமையின் சாட்சியான 'உள்மை' என்ற கவிதை தொகுப்பைக் கண்டு அவரிடம் சென்றேன்.

கவிஞர், தோழர், போராளி, பின் என் அன்பு அண்ணாவாக என் நினைவில் இன்றும் தொடர்கிறார். லயோலாவின் பெர்க்மன்ஸ் இல்லத்து ஓரமாய் இரவு பொழுதுகள் முழுவதும் கழித்திருக்கிறோம்.

எழிலண்ணா, நீ துறவியன்று. நின் பேச்சு மூச்செல்லாம் வெறியால் தெரித்தது ஈழ பேராசை. ஈழம் நடமாடியது உன் சொற்களில்; காட்சியளித்தது உன் கருவிழிப் பார்வையில். உனது வாசம் இன்றும் பரவிக் கிடக்கிறது லயோலாவில்.

எம் பூமி விடுதலை விதைகளால் விதைக்கப்பட்ட பூமி என்றாய். நன்றாக சாப்பிட்ட களைப்பில் நாமிருவரும் இருந்த போது, திடீரென சொன்னாய், விடுதலை இறுதி யாகத்திற்கு போகப்போவதற்காக. விடுதலை இறுதி யாகத்தில் விழுந்து எழச் சென்றாய். "என் விழுதல் பின்னிருட்டில் ஏற்படப் போகும் விடியலிற்கான எதிர்வு கூறல்" என்றாய்.

ஈழத்து களங்களே உன் உள்மை. உன் கவிதைகள் சமரசமற்ற புத்திலிக்கியம்.
மறத்தமிழ் மாண்புடன் உன்னுடன் நான் பழகிய குறைந்த நாட்கள் என்றும் என்னுள் தாக்கங்கள்:

நட்புறவுடன் நீ என்னிடம் பகிர்ந்த விடயங்கள் யாவும்: வதைக் கூடங்களில் கருவாடாக காயும் அண்ணன்மார்களின் உடல்கள், ப்ரியமானவர்களின் வீரச்சாவுகள், கயவர்களால் சூறையாடப் பட்ட தமக்கையரின் கண்ணிமைகள், ஆமிக்காரனால் ரசிக்கப்பட்ட அம்மாக்களின் நிர்வாணம்- பற்றிய கதைகளே.

பெண்களின் அழுகைகளில் எத்தனை அழகுகளோ அத்தனை வலி, எழிலண்ணாவின் புன்னகைகளில்.
என் நினைவையும் கனவையும் வதைத்தெடுத்தபடி இருக்கும் உன் கவிதைகள் பல; அதில் எனக்கு மிகவும் நெருக்கமானவை:

கனவில்
தூக்கம்
விழிக்கிறேன்
யாரோ
என் தாய் மண்ணை
வன்புணர
முயல்வதாய்...

***

வீட்டு முற்றத்து
கடற்கரை மணலை
அள்ளி விளையாட
தடுக்கிறது முட்கம்பி.
ஆனால்,
பார்வைகள் ஏனோ
முட்கம்பிகளுக்கூடாக
தூரத்தே முகிழ்க்கும்
சூரிய உதயத்தை நோக்கி!

***

செஞ்சோற்றுக் கடன்

தமிழீழ மண்
சுமந்த
பனைகளே
தென்னைகளே
நீங்கள்
கர்ணன்
வழித்தோன்றல்கள்
இனச் சுத்திகரிப்புப்
போர்த் - தடுப்பில்
முக்கிய பாத்திரம்
ஏற்றீர்கள்
தமிழின அழிப்பு
முடுக்கிவிடப்பட்டபோது
'ஷெல்' தடுக்கிகளானீர்கள்
தமிழனை வேரோடு
பிடுங்க முற்பட்டபோது
வேரோடு சாய்ந்து
தமிழ் இருப்பைக்
காத்தீர்கள்
உங்களை
ஆகுதியாக்கி
செஞ்சோற்றுக் கடன்
தீர்த்தீர்கள்.

***

அவள்

வெறித்துப் பார்த்தாள்
எதிர்காலத்தை.
தொழிலுக்குப் போன
அப்பா கடலில்...

கண்முன்னே
அம்மா
முடிவிலி உறக்கம்

வீரச்சாவு - செய்தி
தம்பி

இவள் மட்டும்
தனியள்,
இருட்டு,
புதுசாய் மாட்டியிருந்த
ஜெய்ப்பூர் கால் (செயற்கைக் கால்)
வலிதாங்க முடியாது
நிமிர்ந்தாள்
சூனியம் சுருங்கியது
மேகத்தில்
விடிவெள்ளி
சிரித்தது.

என் நெஞ்சகலா திருமறையாக உன்னுடன் கழித்த பொழுதுகள் கணம் ஏற்றுகின்றன.
இது உறுதி, நினைவில் வைத்துக் கொள்:
உன் உள்ள குமுறல் எல்லாம் உலகமயமாக்கப்படும், என் சினிமா மொழியினால்.
விரைவில்.

2 comments:

Anonymous said...

ஆளுமையான வார்த்தைகள்..ஆழமிக்க கவிதைகள்..

அருண் பிரபு said...

நன்றி அண்ணா..